கராகாஸ்: அமெரிக்கா, வெனிசுவேலாமீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கலஸ் மதுரோவை பிடித்துதிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (ஜனவரி 3) அறிவித்துள்ளார்.
ராணுவத் தலைவர் மெனுவல் நொரியெகாவைப் பிடிப்பதற்காக 1989ஆம் ஆண்டு பனாமாவை அமெரிக்கா கைப்பற்றியது. அதையடுத்து நேரடியாக வேறெந்த லத்தீன் அமெரிக்க நாட்டின்மீதும் அமெரிக்கா தாக்குதல் தொடுத்ததில்லை.
“வெனிசுவேலாமீது மிகப் பெரிய தாக்குதலைத் தொடுத்து அதன் அதிபர் நிக்கலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்து நாட்டைவிட்டு அமெரிக்கா வெளியேற்றியுள்ளது,” என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கச் சிறப்புப் படையின் தலைசிறந்த ராணுவ வீரர்கள் மூலம் திரு மதுரோ பிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
இதற்குமுன் தலைநகர் கராகாஸ், மிரண்டா, அரகுவா, லா குவாய்ரா ஆகிய மாநிலங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை வெனிசுவேலா அரசாங்கம் உறுதிப்படுத்தியது. அதையடுத்து திரு மதுரோ தேசிய நெருக்கடி நிலையை அறிவித்தார்.
சனிக்கிழமை (ஜனவரி 3) உள்ளூர் நேரப்படி பின்னிரவு 2 மணியளவில் கராகாஸில் குறைந்தது ஏழு இடங்களில் வெடிப்புச் சத்தமும் தாழப் பறந்த விமானங்களின் இரைச்சலும் கேட்டன. கராகாஸின் ராணுவத் தளத்தில் உள்ள போர் விமானம் நிறுத்துமிடத்தில் புகை எழுப்பியதைக் காண முடிந்தது. வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளைவிட்டு ஓட்டம்பிடித்தனர்.
நிலம் அதிர்ந்ததாகவும் வெடிப்புச் சத்தத்தையும் போர் விமானங்களின் சத்தத்தையும் கேட்டதாகவும் மக்கள் கூறினர்.
தென் அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி நாடான வெனிசுவேலாமீது தரைத் தாக்குதல் நடத்தப்படும் என்று திரு டிரம்ப் இதற்குமுன் பலமுறை கூறியிருந்தார். 2013ஆம் ஆண்டிலிருந்து திரு மதுரோ வெனிசுவேலாவை ஆட்சி புரிந்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
திரு மதுரோ ஆட்சியைத் தக்கவைக்க 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்தியதாக அமெரிக்காவும் பிற நாடுகளும் குறைகூறின.
அப்போது நாட்டைவிட்டு ஓடிவிடும்படி திரு டிரம்ப் ரகசியமாகத் திரு மதுரோவுக்கு நெருக்குதல் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
திரு மதுரோ பதவியைக் கைவிடுவது புத்திசாலித்தனமானது என்று திரு டிரம்ப் கடந்த மாதம் 29ஆம் தேதி குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள எண்ணெய், கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக வெனிசுவேலா அரசாங்கம் சாடியது. அவற்றை வசப்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சி வெற்றிபெறாது என்று அது சூளுரைத்தது.

