வாஷிங்டன்: ஈரானியப் பள்ளிக்கூடம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ள அமெரிக்க மத்திய தளபத்தியத்துடன் சம்பந்தப்படாத அதிகாரி ஒருவரைப் பணியமர்த்தியுள்ளதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறியுள்ளார்.
விசாரணையை முழுமையாக நடத்த, தனிப்பட்ட விசாரணை அதிகாரியை நியமித்திருப்பதாகத் திரு ஹெக்சேத் தெரிவித்தார்.
ஈரான்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலின்போது அங்குள்ள பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்று தாக்கப்பட்டது. அதற்கு அமெரிக்கப் படைகள்தான் காரணம் என்று ஈரான் குறைகூறிவந்துள்ளது.
அமெரிக்க ராணுவம் நடத்திய உள்வட்ட விசாரணையிலும் அமெரிக்கப் படையே பெரும்பாலும் அந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று தெரியவந்ததாக ராய்ட்டர்ஸ் கடந்த வாரம் தெரிவித்தது.
சம்பவம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தேடும் வகையில் முழுமையான, விரிவான விசாரணை நடைபெறும் என்று கூறிய திரு ஹெக்சேத் அனைத்து விவகாரங்களையும் தீர விசாரிக்கத் தேவையான வகையில் அது எவ்வளவு நாள் வேண்டுமானாலும் நீடிக்கக்கூடும் என்றார்.

