நியூயார்க்: யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் 2025ஆம் ஆண்டுதான் ஆக மோசமானதாக இருந்தது என்று புதன்கிழமை (ஜூலை 29) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூதர் மீதான வெறுப்பைத் தடுக்கும் பெரிய சமூகங்களின் ஜே7 பணிக்குழு அறிக்கையை வெளியிட்டது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை வரையப்பட்டது.
இஸ்ரேலுக்கு அப்பால் வாழும் யூதர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் அந்த நாடுகளில் வாழ்கின்றனர்.
பல்வேறு தாக்குதல்களில் பலர் பலி
சென்ற ஆண்டு ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர். அதனால், 1994ஆம் ஆண்டு அர்ஜென்டினா தலைநகர் புவெனஸ் ஆய்ரசில் நடத்தப்பட்ட ‘ஆமியா’ தாக்குதலுக்குப் பிறகு, யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டுதான் ஆக மோசமானதாக விளங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1994ல் யூதர் சமூக நிலையம் ஒன்றில் 85 பேரைப் பலிவாங்கிய தாக்குதலை அறிக்கை சுட்டியது.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்காவில் தாக்குதல்கள்
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் போண்டாய் கடற்கரையில் ஹனுக்கா விழாக் கொண்டாட்டத்தின்போது யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். முன்பு அக்டோபர் மாதம் பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் யூதர்களின் புனித நாளான யோம் கிப்புர் தினத்தன்று கூட்டம் அலைமோதிய யூதர் வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது; இருவர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் அமெரிக்காவில் இரண்டு தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டனர்.
“நமது (செயற்குழுவின்) ஏழு நாடுகளில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு என்பது இனி அந்தந்த நேரத்தில் மோசமடையும் ஒன்றாகக் கூறமுடியாது. இது, தற்போதைய இயல்புநிலையாகும்,” என்று ஜே7 செயற்குழு அறிக்கை மூலம் சொன்னது.
“அரசாங்கங்கள், யூதர்கள் தாக்கப்படுவதற்குப் பிறகு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அதற்கு முன்னரே செயல்படவேண்டும். பாதுகாப்புக்காக சரியான நிதி ஆதரவு தருவது, மேலும் கடுமையான சட்டங்களை விதிப்பது, தங்களின் சொந்த விதிமுறைகளை அமல்படுத்தும் சமூக ஊடகத் தளங்களைக் கொண்டிருப்பது ஆகிய நடவடிக்கைகளை எடுக்கலாம்,” என்று அது குறிப்பிட்டது.

