வாஷிங்டன்: ஈரானிய அணுசக்தித் தளங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் வெற்றிகரமாகத்தான் அமைந்தன என்று அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அமெரிக்க அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது.
அந்தத் தாக்குதல்களின் வெற்றி கேள்விக்குறியாக இருப்பதாக உளவுத்துறைத் தகவல்களை மேற்கொள்காட்டி ஊடகங்கள் குறைகூறி வருகின்றன. அதை மறுக்கும் அமெரிக்க அரசாங்கம், செய்தியாளர்களை சாடியுள்ளது.
அமெரிக்கப் படைகள் ஈரானின் மூன்று அணுசக்தித் தளங்கள் மீது சென்ற வாரம் தாக்குதல் நடத்தின. அதற்குப் பிறகு இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு நடப்புக்கு வந்தது.
திரு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனைகளை முன்வைத்தார் என்றும் ஈரானின் அணுசக்தி ஆற்றலை அவர் அழித்துவிட்டார் என்றும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார். அந்தத் தாக்குதல்கள் ராணுவத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று திரு டிரம்ப்பும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைப் பல மாதங்கள் தள்ளிப்போட மட்டும்தான் செய்துள்ளது என இவ்வாரத் தொடக்கத்தில் அமெரிக்க உளவுத்துறை மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை திரு ஹெக்செத் வன்மையாகக் கண்டித்துப் பேசினார்.
“பொய்ச் செய்திகளைப் பரப்பும் சிஎன்என், எம்எஸ்என்பிசி, நியூயார்க் டைம்ஸ் எதுவாக இருந்தாலும் சரி, முதற்கட்ட ஆய்வு மிகைப்படுத்தப்பட்டு தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது,” என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு நிலையமான பென்டகனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு ஹெக்செத் கூறினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தாக்குதல்கள் வெற்றிகரமாக அமையவில்லை என்பதை நிரூபிக்கும் தவறான எண்ணம் கொண்ட ஒருவர் அந்த ஆய்வு ஆவணத்தைக் கசியவிட்டுள்ளார் என்று அவர் சாடினார்.
இதற்கிடையே, தாங்கள் மீண்டும் அணுசக்திப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுவதை ஈரான் வியாழக்கிழமை (ஜுன் 26) மறுத்தது. அதோடு, தன் மீது அமெரிக்கா மேற்கொண்டத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வாஷிங்டன் மிகைப்படுத்துவதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வரலாறு காணாத வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட பூசலால் அணுசக்திப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. எனினும், அடுத்த வாரம் வாஷிங்டன், டெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று திரு டிரம்ப் கூறியிருந்தார். முழுமையான அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
திரு டிரம்ப் கூறியது வதந்தி என்று சாடிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி, ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளும் என்று கூறப்படுவது உண்மை என்று நினைத்துவிடக்கூடாது எனக் குறிப்பிட்டார்.