மேற்கு ஆசியா எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான தாக்குதல்கள் பொதுச் சுகாதாரத்திற்கு மிரட்டல்: ஐநா

மேற்கு ஆசியா எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான தாக்குதல்கள் பொதுச் சுகாதாரத்திற்கு மிரட்டல்: ஐநா

2 mins read
ec7c5280-e14b-43fd-8d2f-3b44db3a4a33
தாக்கப்பட்ட எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்றிலிருந்து புகை கிளம்புகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: மேற்கு ஆசிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளில் நடத்தப்படும் தாக்குதல்களால் கடுமையான சுற்றுப்புற விளைவுகள் ஏற்படக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) மனிதநேய ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தூய்மையான நீர், பொதுச் சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர்கள் கூறியதாய் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

“சில நாடுகளில் நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கருத்து வெளியாகியுள்ளது,” என்று மனிதநேய விவகார ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அலுவலகம் தெரிவித்தது.

அண்மையத் தாக்குதலுக்கு முன்னரே, அந்த வட்டாரத்தில் கடும் மனிதநேயத் தேவைகள் இருந்ததாக அந்த அலுவலகம் கூறியது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதிலிருந்து, எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியது குறித்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளிக்கையில், எண்ணெய் விலை அதிகரிப்பு ஐநா செயல்பாடுகள் உட்பட அனைத்தையும் பாதிக்கும் என்று ஐநா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரசின் தலைமைப் பேச்சாளர் ஸ்டெஃபேன் டுஜாரிக் கூறினார்.

அந்த அதிகரிப்பு உலக வங்கியின் தளவாடச் செயல்பாடுகளைப் பாதிப்பதாக டுஜாரிக் சொன்னார்.

இந்நிலையில், தென் லெபனானிலும் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளிலும் வெளியேற்ற உத்தரவு தொடர்ந்து நடப்பில் உள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. அங்குள்ள மக்கள் பேரளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

500க்கும் மேற்பட்ட நிலையங்களில் 115,000க்கும் அதிகமானோர் தஞ்சம் புகுந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்ததாக அலுவலகம் கூறியது. அதோடு, 500,000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்திருப்பதாகக் கூறினர்.

பொதுச் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. ஐந்து மருத்துவமனைகளும் பல முக்கியச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் அவற்றின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், “மனிதநேய நிலைமை மிக வேகமாக மோசமடைந்து வருகிறது. பதற்றத்தை உடனடியாகத் தணிக்க வேண்டியது அவசரத் தேவையாக உள்ளது,” என்று அலுவலகம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்