டெஹ்ரான்: இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்கள் தொடரும் என்று ஈரான் கூறியுள்ளது.
மேலும், வரும் நாள்களில் அவ்வட்டாரத்தில் செயல்படும் அமெரிக்க ராணுவத் தளங்களும் குறிவைக்கப்படும் என்று ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் சனிக்கிழமை (ஜூன் 14) தெரிவித்தது. மூத்த ஈரானிய ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஃபார்ஸ் செய்தி வெளியிட்டது.
இஸ்ரேல் வரலாறு காணாத அளவில் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இருதரப்பும் ஒன்று மற்றொன்றைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. ஈரான் அணுவாயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலிய மக்கள் தொடர்ந்து ஏவுகணைகளைப் பாய்ச்சினால் டெஹ்ரான் எரிந்துபோகும் என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானியத் தலைவர் ஆயத்தோலா அலி காமெய்னிக்கு மிரட்டல் விடுத்தார்.
இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஈரான் ஆயுதப் படைப் பொது ஊழியர்ப் பிரிவில் இரு துணைத் தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த இருவர் எப்போது கொல்லப்பட்டனர் என்பது தெரியாமல் இருந்தது. அவர்களின் மரணம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

