தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெக்சசில் வெளிநாட்டவர் நிலம் வாங்க தடை விதிக்க முயற்சி; அதிருப்திக் குரல்கள் எழுந்தன

1 mins read
cdcad5b4-de3a-48f3-ae0d-b54e3624d9d8
தடை விதிக்க எடுக்கப்படும் முயற்சிக்கு எதிராக சனிக்கிழமை (மே 10) டெக்சஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டினில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். - படம்: ஏஎஃப்பி

ஆஸ்டின்: சீன நாட்டவர்களும் அமெரிக்கர் அல்லாத மற்றவர்களும் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் நிலம் வாங்க தடை விதிக்க அம்மாநிலத்தில் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெக்சஸ் மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தடை விதிக்கப்பட்டால், அது சிறுபான்மையினருக்கு எதிராக நியாயமற்ற வகையில் நடந்துகொள்வதாகும் என்று அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

வெளிநாட்டவர்கள் நிலம் வாங்க தடை விதிக்க 2023ஆம் ஆண்டில் முயற்சி எடுக்கப்பட்டது.

ஆனால் தடை விதிக்க தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.

அது சட்டமாக்கப்படவில்லை.

இந்நிலையில், அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தின்கீழ் இந்த முயற்சி புத்துயிர் பெற்றுள்ளது.

தடை விதிக்கப்பட்டால் தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கக்கூடிய நாடுகள் என அமெரிக்காவால் கருதப்படும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் டெக்சஸ் மாநிலத்தில் நிலம் வாங்க முடியாது.

அந்தப் பட்டியலில் தற்போது சீனா, ஈரான், வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன.

ஆனால் அந்தப் பட்டியலில் மற்ற நாடுகளும் சேர்த்துக்கொள்ளப்படலாம்.

தடை விதிக்க எடுக்கப்படும் முயற்சிக்கு எதிராக சனிக்கிழமை (மே 12) டெக்சஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டினில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தடை விதிக்கப்பட்டால் அது இனவாதச் செயலுக்குச் சமம் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.

குறிப்புச் சொற்கள்