தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூனைக் கைது செய்ய தீவிர முயற்சி

2 mins read
c0813f51-5d8e-461c-88d5-52e4cd5589d8
திரு யூன் தங்கியிருக்கும் வீட்டு வளாகத்தைச் சுற்றி சோதனை நடத்தும் தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள். - படம்: ஏஎஃப்பி

சோல்: தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கான முயற்சி மறுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டதன் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்குக்கீழ் திரு யூனைக் கைது செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர் கைதாவதைத் தடுக்கும் வகையில் ஆதரவாளர்கள் திரண்டிருக்கின்றனர்.

எப்படியாவது அக்கூட்டத்தைக் கலைத்து திரு யூனைக் கைது செய்யப்போவதாக தென்கொரியாவின் முன்னணி விசாரணை அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.

திரு யூன் இருப்பதாக நம்பப்படும் மலை பங்ளா வளாகத்துக்குள் பிறர் நுழைவதைத் தடுக்க இந்த வாரம் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூர் கம்பிகள் (barbed wire), தடுப்புகள் போடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விசாரணை நடத்த விடுக்கப்பட்ட ஆணையை திரு யூன் நிராகரித்தார்.

திரு யூனுக்கான கைதாணையை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்ததைத் தொடர்ந்து புதன்கிழமையன்று (ஜனவரி 8) கடுங்குளிரையும் பொருட்படுத்தாது அவரின் ஆதரவாளர்களும் அவரை எதிர்ப்பவர்களும் ஆர்ப்பாட்டம் செய்ய அதிபர் மாளிகை வளாகத்தைச் சுற்றியிருக்கும் சாலைகளில் திரண்டனர்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முன்றாம் தேதியன்று திரு யூன் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தினார். சில மணிநேரம் மட்டுமே நீடித்த அச்சட்டத்தை அமல்படுத்த எடுக்கப்பட்ட முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து திரு யூனுக்கான கைதாணை பிறப்பிக்கப்பட்டது. தென்கொரியாவில் பதவியில் இருக்கும் அதிபர் ஒருவருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது அதுவே முதல்முறையாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் தமது பொறுப்பு சம்பந்தப்பட்ட விதிமுறைகளை மீறியதன் தொடர்பிலும் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பந்தமற்ற அதிகார வரம்புக்கு (jurisdiction) உட்பட்ட நீதிமன்றம் கைதாணையைப் பிறப்பித்ததால் திரு யூனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவரின் வழக்கறிஞர்களில் ஒருவர் புதன்கிழமையன்று கூறினார். அதனால் திரு யூன் மீது விசாரணை நடத்த, உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகத்துக்கு (CIO) அதிகாரம் கிடையாது என்று யூன் கப் கியூன் என்ற அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்