அரசாங்க அமைப்புகளில் பல்வேறு தவறுகள், குறைபாடுகள்: தலைமைக் கணக்காய்வாளர்

மக்கள் கழகம், அரசாங்கச் சேவைப் பிரிவு, தொடர்பு, தகவல் அமைச்சு, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசாங்க அமைப்புகளில் தவறுகளும் குறைபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அரசாங்கக் கணக்குகளின் வருடாந்தர தணிக்கை அறிக்கை இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டியது.

தடை செய்யப்பட்ட குத்தகையாளர்களுக்கு குத்தகைகள் வழங்கப்படுவது, அதிகாரபூர்வ நிதியானது ஊழியரின் தனிப்பட்ட நிதியுடன் கலக்கப்படுவது, அளவுக்கதிகமான தொழில்நுட்பப் பயன்பாட்டு உரிமைகள் வழங்கப்படுவது, ஆதரவு மானியங்கள் மிகையாக வழங்கப்படுவது போன்றவை சான்றுகளாகச் சுட்டிக்காட்டப்பட்டன.

அரசு நீதிமன்றமும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்திடம் கொடுத்த பதிவேடுகளில் முறைகேடுகள் இருக்கக்கூடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது. இதையடுத்து, இரு அமைப்புகளும் காவல்துறையில் புகார் செய்துள்ளன.

அரசு நீதிமன்றம் ஒரு மேம்பாட்டுத் திட்டப்பணிக்கான 295 பொருட்களில் 110 பொருள்களுக்குக் கொடுத்த விலைக்குறிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து கணக்காய்வாளர் அலுவலகம் கவலை தெரிவித்தது.

சிங்கப்பூர் உணவு அமைப்பு நிர்வகிக்கும் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான சில விலைக்குறிப்புகளின் தொடர்பிலும் இதே கவலையைக் கணக்காய்வாளர் அலுவலகம் வெளியிட்டது.

இந்த அறிக்கை ஜூலை நான்காம் தேதி அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மக்கள் கழகம்

மூன்று அடித்தள அமைப்புகள், தடை செய்யப்பட்ட குத்தகையாளர்கள் இருவருக்குப் புதிய குத்தகைகள் வழங்கியதாக அல்லது ஏற்கெனவே இருந்த குத்தகைகளைப் புதுப்பித்ததாகத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் கண்டறிந்தது. இந்த அமைப்புகள் தெரியாமல் அல்லது தெரிந்தே இவ்வாறு செய்திருக்கலாம்.

இரு குத்தகையாளர்களும் வழங்கிய மின்தூக்கி பராமரிப்பு, பாதுகாப்புச் சேவைகளுக்காக மக்கள் கழகம் ஏறத்தாழ $410,000 கொடுத்தது. இவ்வாறு மீண்டும் நேராதிருக்க, குத்தகை வழங்கும் நடைமுறை மறுஆய்வு செய்யப்படும் என மக்கள் கழகம் தெரிவித்ததாக அறிக்கை குறிப்பிட்டது.

ஐந்து அடித்தள அமைப்புகள் ஏப்ரல் 2019 முதல் மே 2022 வரை நிர்வகித்துவந்த 11 சமூகநல உதவித் திட்டங்களையும் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் தணிக்கை செய்தது. இவற்றில் இரு அடித்தள அமைப்புகளின் பண நிர்வாக நடைமுறைகள் ‘பொருத்தமற்றதாகவும் ஆபத்தானதாகவும்’ இருந்ததாகக் கண்டறியப்பட்டது.

ஓர் அடித்தள அமைப்பு, அதன் வங்கிக் கணக்கிலிருந்து $707,000 தொகையை இரு ஊழியர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றியிருந்தது. விழாக்கால நிகழ்ச்சிகளின்போது சமூகநல உதவி பெறுவோருக்கு ரொக்கமாகப் பணம் வழங்குவதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.

மற்றோர் அமைப்பு, பற்றுச்சீட்டு உதவித் திட்டத்தின்கீழ் உணவங்காடிக்காரர்களுக்கும் வணிகர்களுக்கும் பணம் திருப்பித் தருவதற்காக ஓர் ஊழியரின் வங்கிக் கணக்குக்கு $334,500 மாற்றியிருந்தது.

நடைமுறைத் தேவைகளுக்காக இவ்வாறு செய்யப்பட்டதாக மக்கள் கழகம் கூறியது. இவ்விரு சம்பவங்களிலும் பண இழப்போ கையாடலோ இல்லை என்றாலும், அவ்வாறு நேரக்கூடிய அபாயம் இருப்பதாகத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் கூறியது. இரு அடித்தள அமைப்புகளும் இந்த நடைமுறைகளை நிறுத்திவிட்டன.

பராமரிப்புச் சேவைகளுக்கான இரு ஏலக்குத்தகைகள், துப்புரவுச் சேவைக்கான ஒரு ஏலக்குத்தகை ஆகியவை வழங்கப்பட்ட விதத்தில் முறைகேடுகள் இருப்பதையும் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் கண்டுபிடித்தது.

இதன் தொடர்பில் புதன்கிழமை அறிக்கை வெளியிட்ட மக்கள் கழகம், தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் கண்டறிந்தவற்றைப் பரிசீலனை செய்ய மறுஆய்வுக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தது.

அரசாங்கச் சேவைப் பிரிவு

அரசாங்கச் சேவைப் பிரிவின் மனிதவள, சம்பளச் செயலமைவைத் தணிக்கை செய்த தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம், அதில் பலவீனங்கள் இருந்ததைக் கண்டறிந்தது. இந்தச் செயலமைவு 186,000க்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களுக்குச் சேவை வழங்குகிறது.

வெளித்தரப்புத் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அளவுக்கதிகமான அணுகல் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. தரவுக்கோப்புகளைத் திருத்தவோ அல்லது நீக்கவோ அந்த உரிமைகள் அனுமதியளித்தன.

தொடர்பு, தகவல் அமைச்சு

தொடர்பு, தகவல் அமைச்சு நிர்வகிக்கும் ஒட்டுமொத்த அரசாங்க ஒப்பந்தக்காலக் கட்டமைப்பு உடன்பாட்டில் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் தவறுகளைக் கண்டறிந்தது.

முதல் உடன்பாடு காலாவதியான பிறகு, 2022 ஏப்ரல் மாதம் இரண்டாவது உடன்பாட்டை அமைச்சு அமைத்தது. அதில் இடம்பெற்றிருந்த 108 ஏலக்குத்தகையாளர்களில் ஐவர் மதிப்பீட்டுக்குரிய விதிமுறைகளை நிறைவேற்றவில்லை. அந்த ஐந்து நிறுவனங்களும் நீக்கப்பட்டுவிட்டன.

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்

கொவிட்-19 பெருந்தொற்றின்போது விமானத்துறைக்கு ஆதரவளிக்க பல்வேறு மானியத் திட்டங்களை ஆணையம் நிர்வகித்தது. அத்திட்டங்களில் ஒன்றுக்காக 2020 செப்டம்பர் மாதத்திற்கும் 2022 மார்ச் மாதத்திற்கும் இடையில் $114.52 மில்லியன் மானியம் வழங்கப்பட்டது.

அதில் ஒரு மில்லியன் வெள்ளி வரை மிகையாக வழங்கப்பட்டிருந்ததைத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் கண்டறிந்தது. மானியம் கோரிய நிறுவனங்கள் தகுதிபெறாத ஊழியர்களை உள்ளடக்கியது இதற்குக் காரணம்.

மானியம் பெற்ற ஒவ்வொரு நிறுவனமும் வெளித்தரப்புத் தணிக்கையாளரை நியமித்திருந்தது என்றும் அந்தத் தணிக்கையாளர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டவில்லை என்றும் ஆணையம் தெரிவித்தது.

மிகையாக வழங்கப்பட்ட மானியங்களைத் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாதிருக்க கட்டுப்பாடுகள் வலுவாக்கப்படும் என்றும் ஆணையம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!