யங்கூன்: ஜூன் மாதம் 19ஆம் தேதி, மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியின் பிறந்தநாள்.
அவருக்கு 80 வயது.
80 வயதாகியிருக்கும் திருவாட்டி சூச்சியின் சிறைவாசம் தொடர்கிறது.
அவரை மியன்மார் ராணுவ ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
திருவாட்டி சூச்சி தலைமையிலான அரசாங்கத்தை மியன்மார் மக்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்தனர். ஆனால் 2021ஆம் ஆண்டில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது.
ஊழல், கொவிட்-19 நெருக்கடிநிலை கட்டுப்பாடுகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகள் திருவாட்டி சூச்சி மீது சுமத்தப்பட்டன.
அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
“அவரது 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் சூழ்நிலையில் நாங்கள் இல்லை. ஆனால் இந்த அவலநிலையை நீண்டகாலமாகவே அனுபவித்து வருகிறோம். எனவே, அது எங்களுக்குப் பழகிவிட்டது,” என்று திருவாட்டி சூச்சியின் மகனான 47 வயது கிம் ஆரிஸ், பிரிட்டனிலிருந்து தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமது தாயாரின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டு நாள்களில் 80 கிலோமீட்டர் ஓடுகிறார் திரு கிம் அரிஸ்.
திருவாட்டி சூச்சி சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து ஒருமுறை மட்டுமே அவரிடமிருந்து கடிதம் கிடைத்ததாக அவர் கூறினார். கடிதம் கிடைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
தமது தாயாரின் நிலை குறித்து தமக்கு எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என்றார் திரு கிம் ஆரிஸ்.