அமெரிக்கா: மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியை உடனடியாக விடுதலை செய்யும்படி அந்நாட்டிற்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறப்புத் தூதர் ஜூலி பிஷப் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மியன்மாரில் திருவாட்டி சூச்சி தமது 81வது பிறந்தநாளைத் தடுப்புக் காவலில் கழித்ததை அவர் சுட்டினார்.
“முன்னாள் தலைவர் திருவாட்டி சூச்சியின் இக்கட்டான நிலை குறித்து பலமுறை கூறியிருக்கிறேன். 2020ஆம் ஆண்டு நவம்பரில் மீண்டும் தேர்வுசெய்யப்பட்ட அவர், ராணுவ ஆட்சி தலைதூக்கியதைத் தொடர்ந்து கடுமையான தண்டனைக்குரிய காவலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று வெள்ளிக்கிழமை (ஜூன் 18) திருவாட்டி ஜூலி கூறினார்.
நான்காவது முறையாக மியன்மாருக்குப் பயணம் மேற்கொண்ட அவர், ஒருசில வாரங்கள் கழித்து ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உறுப்பு நாடுகளிடம் பேசினார்.
“திருவாட்டி சூச்சியைப் பற்றி உறுதிப்படுத்தக்கூடிய எந்தவித அறிக்கைகளும் இத்தனை ஆண்டுகளில் இல்லை. இன்று, 81 வயதை எட்டிய அவரை விடுதலை செய்யும்படியான கோரிக்கையை மற்றவர்களும் என்னுடன் சேர்ந்து முன்வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் திருவாட்டி ஜூலி.
மதிப்புமிக்க அதிகாரபூர்வத் தலைவராகத் திருவாட்டி சூச்சி அமைத்த அரசாங்கத்தை மியன்மார் ராணுவம் 2021ஆம் ஆண்டு கவிழ்த்ததை அவர் நினைவூட்டினார்.
மியன்மாரின் ராணுவத் தலைவர் மின் ஆங் லைங் இவ்வாண்டு ஏப்ரலில் மீண்டும் அதிபராகப் பதவியேற்றதை அடுத்து, அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற திருவாட்டி சூச்சிக்கு 30 ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
ஆனால், திருவாட்டி சூச்சி எங்கிருக்கிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தம் தாய் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும்படி மியன்மார் ராணுவத் தலைவர்களிடம் அவரது மகன் வலியுறுத்தியுள்ளார்.


