ஆங் சான் சூச்சி வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்

வழக்கறிஞர்கள் குழு அவரை சந்திக்கத் திட்டம்

ஆங் சான் சூச்சி வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்

2 mins read
dd3fbdfa-061c-4aeb-8ab5-8e4e82dcc58e
மியன்மார் ராணுவத் தகவல் குழுவால் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் படத்தில் திருவாட்டி ஆங் சான் சூச்சி அடையாளம் தெரியாத ஓரிடத்தில் அதிகாரிகளுடன் உரையாடுகிறார். மியன்மாரின் புதிய அதிபர் மின் ஆங் ஹ்லேங், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சிறையிலிருந்து வீட்டுக்காவலுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். - படம்: ஏஎஃப்பி

நேப்பிடோ: மியன்மாரின் முன்னாள் அதிபர் ஆங் சான் சூச்சி, சிறையிலிருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் குழு சனிக்கிழமை (மே 1) உறுதிப்படுத்தியது.

நோபெல் பரிசு பெற்ற திருவாட்டி சூச்சி, 2021ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சிக்குப் பிறகு பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையில் ஆறில் ஒரு பங்கு ஏப்ரல் 30ஆம் தேதி குறைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, திருவாட்டி சூச்சி ஏப்ரல் 30 இரவே வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக அவரது சட்டக் குழுவின் உறுப்பினர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார். மியன்மார் அதிபர் மின் ஆங் ஹ்லேங், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சிறையிலிருந்து வீட்டுக்காவலுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாது இருந்த நிலையில், தற்போது அவர் தலைநகரிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலத்திற்குப் பிறகு, மர இருக்கையில் அமர்ந்திருக்கும் அவரது புகைப்படம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

மே 3ஆம் தேதி அவரது வழக்கறிஞர் குழு அவரைச் சந்தித்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஊழல், தேர்தல் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் திருவாட்டி சூச்சிக்கு முதலில் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது 27 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. தற்போது 80 வயதாகும் சூச்சியை விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்துலக அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவ அரசாங்கம் அவரை வீட்டுக் காவலுக்கு மாற்றியுள்ளது.

மியன்மாரின் சுதந்திரப் போராட்ட வீரர் ஆங் சானின் மகளான சூச்சி, ஏற்கெனவே முந்தைய ராணுவ ஆட்சியில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் இருந்தார்.

குறிப்புச் சொற்கள்