நேப்பிடோ: நோபெல் பரிசு பெற்ற மியன்மார் முன்னாள் அதிபர் ஆங் சான் சூச்சியின் சிறைத்தண்டனை ஆறில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது தண்டனைக் குறைப்பு இது.
2021ஆம் ஆண்டு ராணுவப் புரட்சிக்குப் பிறகு சிறைபிடிக்கப்பட்ட 80 வயதான சூச்சிக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் மொத்தம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அவரது தண்டனைக்காலம் 27 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி மியன்மார் புத்தாண்டுப் பொதுமன்னிப்பின்கீழ் மீண்டும் குறைக்கப்பட்டது. அப்போது அவரது நண்பரும் முன்னாள் அதிபருமான வின் மைண்ட்டும் விடுவிக்கப்பட்டார்.
மியன்மார் அதிபர் மின் ஆங் ஹ்லேங் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) அனைத்துக் கைதிகளின் சிறைத்தண்டனையையும் ஆறில் ஒரு பங்காகக் குறைத்ததையடுத்து திருவாட்டி சூச்சிக்கு கூடுதல் சலுகை கிடைத்துள்ளது.
இருந்தாலும், அவர் இன்னும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
அத்துடன், ஆங் சான் சூச்சி எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதும் ரகசியமாகவே உள்ளது. வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு அவர் பொதுவெளியில் தலைகாட்டவே இல்லை.
அவரது சட்டக் குழுவோ அல்லது குடும்பத்தினரோ அவரை நேரில் சந்திக்க மியன்மார் அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. அனைத்துலக அழுத்தங்களைக் குறைக்கவே ராணுவம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி சூச்சியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
திருவாட்டி சூச்சி ‘நன்கு கவனித்துக் கொள்ளப்படுவதாகவும்’ தமது அரசாங்கம் சில ‘நல்ல விஷயங்களை’ பரிசீலித்து வருவதாகவும் அதிபர் மின் சென்ற வாரம் தாய்லாந்து வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்திருந்தார்.

