ஆஸ்திரேலியா, ஜப்பான் செய்துகொண்ட எரிபொருள், கனிமவள ஒப்பந்தம்

ஆஸ்திரேலியா, ஜப்பான் செய்துகொண்ட எரிபொருள், கனிமவள ஒப்பந்தம்

2 mins read
இருநாடுகளும் பலனடையும் வகையில் பணியாற்றுகிறோம்: ஆஸ்திரேலியப் பிரதமர்
5cd9de32-172d-47f3-86b8-c6b139d11202
திங்கட்கிழமை (மே 4) ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவில் இருநாட்டுப் பிரதமர்களும் சந்தித்துக்கொண்டனர். - படம்: இபிஏ

சிட்னி: எரிபொருள், அரிய கனிம வளங்கள் ஆகியவற்றுக்கான ஆழமான ஒத்துழைப்பு குறித்து ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒப்பந்தம் செய்துகொண்டன.

ஆஸ்திரேலியாவுக்கு திங்கட்கிழமை (மே 4) மூன்று நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி அங்கு அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிசை சந்தித்தார். அவர்களின் சந்திப்பில் தற்காப்பு ஒப்பந்தம் முக்கிய அங்கம் வகித்தது. அதற்குப் பிறகு எரிபொருள், உணவு, அரிய கனிமவளங்களின் விநியோகத் தொடர் ஆகியவற்றை வலுப்படுத்த இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர்.

“ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் எதிர்காலத்தில் நிகழக்கூடிய பொருளியல் நெருக்கடிகளையும் நிலையற்ற தன்மையையும் எதிர்கொண்டு பாதுகாத்துக்கொள்ளும் வகையில் செயலாற்றுகிறோம்,” என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

"ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலம், நாம் பாதுகாப்பான, நெகிழ்வான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவோம். இது ஆஸ்திரேலிய, ஜப்பானிய வணிகங்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் இப்போதும் வருங்காலத்திலும் பயனளிக்கும்," எனவும் அவர் விளக்கினார்.

ஜப்பானின் மூன்றில் ஒரு பங்கு எரிபொருளை ஆஸ்திரேலியாவே வழங்குகிறது. மேலும், ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்யும் மொத்த இயற்கை திரவ எரிவாயுவுக்கு (எல்என்ஜி) ஜப்பான் மிகப் பெரிய சந்தையாக உள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் இருநாடுகளுக்கும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. ஜப்பானுக்கு S$1.2 பில்லியன் நிதி ஆதரவு வழங்கி அரிய கனிம வளங்களைப் பெறும் திட்டத்தில் ஆஸ்திரேலியா பங்கேற்கவுள்ளது. அதன்வழியாக அத்திட்டத்திற்கான மூலப்பொருள்களை ஜப்பானுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் சாத்தியங்கள் உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம், ஆஸ்திரேலியாவுக்கு ஏறத்தாழ S$9 பில்லியன் மதிப்புள்ள ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டது.

குறிப்புச் சொற்கள்