ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இடம்பெற ஆஸ்திரேலியா முயற்சி

ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இடம்பெற ஆஸ்திரேலியா முயற்சி

படம்: இபிஏ

21 Sep 2026 - 10:30 am

2 mins read

சிட்னி: ஐக்கிய நாட்டு (ஐநா) பாதுகாப்பு மன்றத்தில் இணைவதற்கு ஆஸ்திரேலியா போட்டியிடும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) தெரிவித்திருக்கிறார்.

தமது வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிரந்தரமற்ற இரண்டு இடங்களில் ஒன்றைக் கைப்பற்றுவதற்கான இயக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

பாதுகாப்பு மன்றத்தில் ஆஸ்திரேலியா கடைசியாகப் பணியாற்றிய ஈராண்டு காலம் 2014ல் நிறைவடைந்தது. இந்நிலையில், தற்போது அதில் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆஸ்திரேலியர்களுக்கு அவசியமான உலகளாவிய பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று திரு அல்பனீஸ் கூறினார்.

“ஆஸ்திரேலியா தனது திறனுக்கு மீறி சிறப்பாகப் பங்களித்து வருகிறது. உலக அளவில் நம்மால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்; ஆஸ்திரேலியா அதைச் செய்வதையே நான் பார்க்க விரும்புகிறேன்,” என்றார் அவர். ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பசிபிக் தீவு நாடுகள், தென்கிழக்காசிய நாடுகளிடமிருந்து மிகவும் வலுவான ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

உலகத் தலைவர்களுடன் தமக்குள்ள வலுவான உறவுகள் ஆஸ்திரேலியாவின் இந்தப் போட்டிக்கு உதவும் என்றும் திரு அல்பனீஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்பு மன்றத்தில் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் உள்ளன; இவற்றில் ஒவ்வோர் ஆண்டும் 5 உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

2029-2030ஆம் ஆண்டிற்கான மேற்கு ஐரோப்பிய மற்றும் மற்ற நாடுகள் பிரிவிலிருந்து ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து பின்லாந்தும் போட்டியிடுகிறது. ஆசிய-பசிபிக், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியக் குழுக்களும் நியமனங்களை முன்வைக்கும்.

2029-2030 தவணைக்கான நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு 2028ஆம் ஆண்டில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து ஆகியவை ஐநா பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பியம் பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்