சிட்னி: ஈரானிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா வியாழக்கிழமை (மார்ச் 26) முதல் தடை விதிக்கிறது.
குறுகியகால விசாவில் ஆஸ்திரேலியா செல்லும் ஈரானியர்கள், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் தங்கள் விசா காலம் முடிந்த பிறகு நாடு திரும்ப மறுப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாகக் கூறி, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானியக் கடப்பிதழ் வைத்திருப்போர், அடுத்த ஆறு மாதங்களுக்கு சுற்றுப்பயணம் அல்லது வேலைக்காக ஆஸ்திரேலியா செல்ல அனுமதி மறுக்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் நிலவும் மோதல் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள், அது காலாவதியான பிறகும் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற இயலாத அல்லது விரும்பாத நிலை ஏற்படும் சாத்தியம் அதிகம்,” என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், ஆஸ்திரேலியக் குடிமக்களின் பெற்றோர் போன்ற குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தகுதியின் அடிப்படையில் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அமைச்சு சொன்னது.
இது தொடர்பாகப் பேசிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், “ஈரானில் மோதல் தொடங்குவதற்கு முன்பே வருகையாளர் விசா வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் விசா வழங்கப்பட்டிருக்க மாட்டாது. ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்குவது என்பது அரசாங்கத்தின் திட்டமிட்ட முடிவாக இருக்க வேண்டுமே தவிர, யாரோ ஒருவர் சுற்றுலாவுக்காக முன்பதிவு செய்ததன் விளைவாக எடுக்கப்பட்ட முடிவாக அமைந்துவிடக் கூடாது,” என்றார்.
ஆஸ்திரேலியாவில் ஈரானிய வம்சாவளியினர்
அரசுப் புள்ளிவிவரங்களின்படி, 85,000க்கும் அதிகமான ஆஸ்திரேலியவாசிகள் ஈரானில் பிறந்தவர்கள். சிட்னி, மெல்பர்ன் போன்ற பெருநகரங்களில் ஈரானிய வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.

