ஆஸ்திரேலியா: குயீன்ஸ்லாந்திலும் பறவைக் காய்ச்சல்

ஆஸ்திரேலியா: குயீன்ஸ்லாந்திலும் பறவைக் காய்ச்சல்

படம்: பிக்சாபே

25 Jul 2026 - 6:26 pm

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மாநிலத்திலும் ஆபத்தான எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று பதிவாகியுள்ளது.

இதன்மூலம், அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நான்காவது ஆஸ்திரேலிய மாநிலமாக குயீன்ஸ்லாந்து உருவெடுத்துள்ளது.

மாநிலத் தலைநகர் பிரிஸ்பேனிலிருந்து ஏறக்குறைய 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மோர்ட்டன் தீவில் இறந்து கிடந்த ‘பெட்ரெல்’ வகையைச் சேர்ந்த புலம்பெயர் கடல் பறவை ஒன்றைப் பூங்கா பராமரிப்பாளர்கள் கண்டெடுத்தனர்.

அந்தப் பறவையைப் பரிசோதித்ததில் எச்5என்1 கிருமித்தொற்று இருப்பது சனிக்கிழமை (ஜூலை 25) உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இதுவரை மொத்தம் 18 பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், குயீன்ஸ்லாந்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிப் பண்ணைகளிலோ அல்லது பிற விலங்குகளிடமோ நோய்த்தொற்றோ உயிரிழப்போ பதிவாகவில்லை என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மனிதர்களின் உடல்நலனுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பரவிவரும் அந்த வீரியமிக்க பறவைக் காய்ச்சல் கிருமியால் மில்லியன் கணக்கான காட்டுப் பறவைகள் உயிரிழந்தன.

அத்துடன், கோழிப் பண்ணைகள், பால் பண்ணைகள் மற்றும் சில பண்ணைத் தொழிலாளர்களையும் இந்த நோய் தாக்கியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில், ஆஸ்திரேலிய அரசாங்கம் உள்ளூர் கடல் பறவை ஒன்றிற்கு எச்5என்1 தொற்று பரவியதை உறுதி செய்தது. இதனால் நோய்த்தொற்று மேலும் பரவக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்