யூதர்களுக்கு எதிராக நாசவேலையில் ஈடுபடுவோரைக் கண்டுபிடிக்க ஆஸ்திரேலியா உறுதி

2 mins read
a83dc8b4-336c-47a7-b438-51a097f33a20
சிட்னியின் தெற்குப் பகுதியில் உள்ள யூதர்களின் வழிபாட்டுத்தலத்தில் பூசப்பட்ட தகாத வார்த்தைகள் அகற்றப்பட்டன. - படம்: இபிஏ

சிட்னி: யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்படும் குற்றச்செயல்களின் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஆஸ்திரேலியக் காவல்துறை உறுதிகூறியுள்ளது.

சிட்னியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) கார்கள் எரிக்கப்பட்டதோடு, அவற்றின்மீது தகாத வார்த்தைகள் பூசப்பட்டன.

யூதச் சமூகத் தலைவர் ஒருவரின் முன்னாள் வீட்டுக்கு அருகில் இரண்டு கார்களுக்குத் தீவைக்கப்பட்டன. அதோடு, யூதர்களுக்கு எதிரான வாசகங்கள் அவற்றின்மீது கிறுக்கப்பட்டிருந்தன.

வெறுப்பைத் தூண்டும் அண்மையக் குற்றச்செயல்களில், வீடு ஒன்றில் சிவப்பு நிறச் சாயம் பூசப்பட்டதும் அடங்கும். ஒருகாலத்தில் பிரபல யூத ஆஸ்திரேலிய வழக்கறிஞர் அலேக்ஸ் ரிவ்சின் அந்த வீட்டின் சொந்தக்காரராக இருந்தார். அவரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை காவல்துறை விசாரித்து வருகிறது.

‘‘நாங்கள் உங்களைத் தேடிக் கண்டுபிடித்து, சிறையில் அடைப்போம்,’’ என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காவல்துறை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யாஸ்மின் கேட்லீ கூறினார்.

‘‘நம் தெருக்களில் நாம் காண்பவை, ஆஸ்திரேலிய வழக்கங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை,’’ என்றார் அவர்.

சிட்னியில் சென்ற வாரம் நாச வேலையில் ஈடுபடுவோர், இரண்டு யூத வழிபாட்டுத்தலங்களில் நாட்ஸி சின்னங்களைக் கிறுக்கிச் சேதப்படுத்தினர்.

‘‘அது, ஆஸ்திரேலியாவில் இடம் இல்லாத ஒரு வித வெறுப்பு,’’ என்று உள்துறை அமைச்சர் டோனி பர்க் கூறினார்.

‘‘இரவு முழுதும் நடத்தப்பட்ட குற்றச்செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்,’’ என்றார் அவர்.

சென்ற ஆண்டு டிசம்பரில் மெல்பர்னில் உள்ள யூத வழிபாட்டுத்தலத்திற்கு முகமூடி அணிந்திருந்த சிலர் தீயிட்டினர். அதனைத் தொடர்ந்து, யூதர்களுக்கு எதிரான குற்றச்செயல்களைக் கையாள அரசாங்கம் மத்திய பணிக்குழு ஒன்றை அமைத்தது.

குறிப்புச் சொற்கள்