மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டிக்காப்பது குறித்து ஆஸ்திரேலியா கவலை

மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டிக்காப்பது குறித்து ஆஸ்திரேலியா கவலை

படம்: ராய்ட்டர்ஸ்

21 Sep 2026 - 2:04 pm

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே 2060களில் முதன்முறையாகப் பிறப்புகளைவிட இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அந்நாடு கணித்துள்ளது.

மூப்படையும் மக்கள்தொகை, குறைந்துவரும் குழந்தைப் பிறப்பு, குடியேற்றக் கட்டுப்பாடுகள் முதலியவற்றை எதிர்கொண்டுவரும் நாட்டின் பொருளியலில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய மாற்றமாக அது இருக்கும் என்று ஆஸ்திரேலிய நிதி அமைச்சு திங்கட்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

பல ஆண்டுகளாகவே குறைந்த பிறப்பு விகிதத்தைச் சமன் செய்யக் குடியேற்றத்தையே நம்பியிருந்தது ஆஸ்திரேலியா. அதன் மூலமாகவே மக்கள்தொகை வளர்ச்சியை ஆஸ்திரேலியா தக்கவைத்து வந்தது. ஆனால் தற்போது குடியேற்றம் குறைந்து வருவதால், பிறப்புகளை விட இறப்புகள் அதிகமாக உள்ள பல முன்னேறிய பொருளியல்கள் சென்ற அதே பாதையில் ஆஸ்திரேலியாவும் நகரத் தொடங்கியுள்ளது. ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா போன்றவை அவற்றுள் அடங்கும்.

இனிவரும் 40 ஆண்டுகளில் நாட்டின் பொருளியல் இலக்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஐந்து முக்கிய மாற்றங்களை அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), அரசியல் பிளவுகள், எரிசக்தி உருமாற்றம், மூப்படையும் மக்கள்தொகை, சேவைத் துறை சார்ந்த பொருளியல் மாற்றம் ஆகியவையே அவை என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

ஆஸ்திரேலியா அடுத்த 40 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி ஆண்டிற்கு 0.9 விழுக்காடாகக் குறையும் என்று முன்னுரைத்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இருந்த சராசரி 1.4 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் குறைவு.

குறிப்புச் சொற்கள்