தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூதருக்கு எதிரான தாக்குதல்: ஈரான் காரணம் என்று சாடிய ஆஸ்திரேலியா

2 mins read
0a9ead7d-2064-42fc-9180-7e48c84c66f3
ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரானுக்கான தூதர் ஏழு நாள்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் உத்தரவிட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஆஸ்திரேலியா: சிட்னி, மெல்பர்ன் ஆகிய நகரங்களில் யூதர்களுக்கு எதிராக இரண்டு தீ வைப்புத் தாக்குதல்களை நடத்தியதாக ஆஸ்திரேலியா ஈரானைக் குறைகூறியுள்ளது.

அதையடுத்து ஈரானுக்கான தூதர் ஏழு நாள்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்றும் ஆஸ்திரேலியா உத்தரவிட்டது.

2023 அக்டோபரில் இஸ்ரேல்-காஸா போர் தொடங்கியதிலிருந்து ஆ‌ஸ்திரேலியாவில் உள்ள வீடுகள், பள்ளிகள், யூத வழிபாட்டுத் தலங்கள், வாகனங்கள் ஆகியவைமீது யூதர்களுக்கு எதிரான தீ வைப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன.

அத்தகைய குறைந்தது இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதை ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு திரட்டிய நம்பகமான ஆதாரங்கள் சுட்டுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் கூறியுள்ளார்.

“ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு வெளிநாடு நிகழ்த்திய ஆக ஆபத்தான, கடுமையான தாக்குதல் அது,” என்ற திரு அல்பனீஸ், “சமூகப் பிணைப்பைக் கீழறுக்கவும் சமூகத்தில் பிரிவினையை விதைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி அது,” என்றார்.

சிட்னியில் உள்ள யூத உணவகம் மீதும் மெல்பர்னில் உள்ள அடாஸ் என்ற இஸ்ரேலிய வழிபாட்டுத் தலம் மீதும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதை ஈரான் மூடிமுறைக்க முயன்றது என்று திரு அல்பனீஸ் குறிப்பிட்டார். அந்த இரு தாக்குதல்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஈரான், தனது தூதரைத் திருப்பி அனுப்பியதற்குப் பதிலடி கொடுக்கப்போவதாகச் சூளுரைத்தது.

“ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறோம்,” என்றார் ஈரானிய வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பாக்காயி. “அரசதந்திர மட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு பொருத்தமற்ற, நியாயமற்ற நடவடிக்கைகளுக்கும் பதில் நடவடிக்கை உண்டு,” என்றார் அவர்.

ஈரான் கூடுதல் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைப்பு கூறியதாகச் சொன்ன திரு அல்பனீஸ், ஈரானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது என்றும் தனது அரசதந்திரிகள் வேறொரு நாட்டில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

ஈரானின் தெஹ்ரான் இஸ்லாமியப் புரட்சிப் படையை பயங்கரவாத அமைப்பாகத் தமது அரசாங்கம் வகைப்படுத்துவதாகவும் திரு அப்லனீஸ் கூறினார்.

தனது பரம வைரியின் மீது ஆஸ்திரேலியா மேற்கொண்ட நடவடிக்கையை ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம் வரவேற்றது.

குறிப்புச் சொற்கள்