சிட்னி: 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை மீறும் தளங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ஆஸ்திரேலியா இருமடங்காக உயர்த்தும் என்று அந்நாட்டின் அரசாங்கம் சனிக்கிழமை (ஜூன் 27) தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடுகளைப் பரவலாக மீறுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்ட விதிமுறைகளைத் தொடர்ந்து மீறும் தளங்களுக்கான அதிகபட்ச அபராதத்தை 99 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக (68 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) உயர்த்தும் என்றும் இந்தத் தளங்களைக் கட்டுப்படுத்த ‘இ-சேஃப்டி’ (eSafety) என்ற ஆன்லைன் கண்காணிப்பு அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் என்றும் அது கூறியுள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், யூடியூப் ஆகியவை விதிமுறைகளை மீறியிருக்கலாம் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
“சட்டத்திற்கு இணங்குவதற்குப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் அதிகமான குழந்தைகள் சமூக ஊடகங்களில் உள்ளனர்,” என்று பிரதமர் அந்தோனி அல்பனீஸ் கூறினார்.
“சமூக ஊடக நிறுவனங்கள் சட்டத்தை மதிக்கத் தவறுவதை நாங்கள் எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்பதை இந்த மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன,” என்றும் அவர் கூறினார்.
வயது குறைந்த பயனர்கள் பெரியவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கணக்குகளைப் பயன்படுத்துவது, போலிக் கணக்குகளை உருவாக்குவது, தனிப்பட்ட இணையத் தேடுதளங்கள் வழியாக உள்நுழைவது ஆகியவற்றின் வழியாக இந்தக் கட்டுப்பாடுகளைத் தவிர்த்து வருகின்றனர்.
பிரிட்டன், இந்தோனீசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உட்பட, இதேபோன்ற தடைகளை அறிமுகப்படுத்தியுள்ள அல்லது அதுகுறித்து மறுஆய்வு செய்யப்பட்டு வரும் பல நாடுகளுக்கு ஆஸ்திரேலியாவின் இந்தக் கட்டுப்பாட்டின் வெற்றி மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில்’ மருத்துவ சஞ்சிகையில் இந்த மாதம் வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய நடவடிக்கையின் முதல் மதிப்பீடுகளில் ஒன்று, இளையர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டில் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான போதிய சான்றுகள் இல்லை என்று கண்டறிந்துள்ளது.

