சிட்னி: ஆஸ்திரேலியா, அனைத்துலக மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஒருமடங்குக்குமேல் உயர்த்தியிருப்பதாக ஜூலை 1ஆம் தேதி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் குடியேறியதால் ஆஸ்திரேலிய சொத்துச் சந்தை எதிர்கொள்ளும் நெருக்குதலைச் சமாளிக்க அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள அண்மைய நடவடிக்கை இது.
ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி, அனைத்துலக மாணவர்களுக்கான விசா கட்டணம் 1,600 ஆஸ்திரேலிய டாலராக (S$1,446) உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் அது 710 ஆஸ்திரேலிய டாலராக இருந்தது (S$641).
மேலும், வருகையாளர் விசா வைத்திருப்போரும் தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்போரும் ஆஸ்திரேலியா சென்றபின் மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“இன்று நடப்புக்கு வரும் மாற்றங்கள் ஆஸ்திரேலியாவின் அனைத்துலகக் கல்வித் திட்டத்தின் நேர்மையான நடைமுறையை மீட்டெடுக்கவும் நியாயமான, சிறிய, மேம்பட்ட குடியேற்ற நடைமுறையை உருவாக்கவும் உதவும்,” என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் கூறியுள்ளார்.
தற்போது மாணவர் விசா கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைவிட ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதைத் தடுக்கும் வண்ணம் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கியிருப்பதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியது.
2022 முதல் 2023ஆம் ஆண்டு வரை இரண்டாவது அல்லது அதற்கடுத்தமுறை மாணவர் விசா பெற்றவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டுக்குமேல் அதிகரித்து 150,000க்குமேல் பதிவானதை அடுத்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆங்கில மொழி தகுதிவிதிகள் கடந்த மார்ச் மாதம் கடுமையாக்கப்பட்டன. விசா பெறுவதற்கு அனைத்துலக மாணவர்களுக்குத் தேவைப்படும் சேமிப்பு கடந்த மே மாதம் 24,505 ஆஸ்திரேலிய டாலரிலிருந்து 29,710 ஆஸ்திரேலிய டாலருக்கு உயர்த்தப்பட்டது.
அது கிட்டத்தட்ட ஏழு மாதங்களில் செய்யப்பட்டுள்ள இரண்டாவது அதிகரிப்பாகும்.
இந்தத் துறையில் அரசாங்கத்தின் தொடர் கொள்கை நெருக்குதல் நாட்டின் வலிமையான நிலைக்கு இடையூறாக இருக்கும் என்று ‘யுனிவர்சிட்டிஸ் ஆஸ்திரேலியா’வின் தலைமை நிர்வாகி லூக் ஷீஹி கூறினார்.
“இது நமது பொருளியலுக்கும் நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கும் நல்லது அல்ல. அவை இரண்டும் அனைத்துலக மாணவர் கட்டணங்களை அதிகம் சார்ந்துள்ளன,” என்றார் திரு ஷீஹி.
அனைத்துலகக் கல்வி, ஆஸ்திரேலியாவுக்குப் பெரும் வருமானம் ஈட்டித்தரும் ஆகப் பெரிய துறைகளில் ஒன்று.
2022-2023ஆம் நிதியாண்டில், அது பொருளியலுக்கு 36.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பைச் சேர்த்தது.

