சிட்னி: ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) கையெழுத்தானது.
பல ஆண்டுகள் நடந்த பேச்சுவார்த்தைகளின் முத்தாய்ப்பாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
ஐரோப்பா தனது ஏற்றுமதிச் சந்தைகளைப் பன்முகப்படுத்தவும் அதன் பாரம்பரியப் பங்காளிகளுக்கு அப்பால் வர்த்தக உறவை விரிவுபடுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் 2018ஆம் ஆண்டு தொடங்கின. அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பால் ஏற்பட்ட உலகளாவிய வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில், நிதானமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றன.
முக்கியத் தாதுக்கள் விவகாரத்தில் குறிப்பிட்ட சில வளங்கள் மீது சீனா விதித்துள்ள ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளால், அந்த நாட்டைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுவரும் முயற்சியை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தோனீசியாவுடனும் இவ்வாண்டு ஜனவரியில் இந்தியாவுடனும் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது.
அதனைத் தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலியாவுடன் இணைந்துள்ளதன் மூலம் இந்தோ-பசிபிக் வட்டாரங்களில் ஐரோப்பாவின் ஈடுபாடு அதிகரித்திருப்பது புலப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐரோப்பிய ஒன்றியப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 99 விழுக்காட்டிற்கும் மேலான வரிகள் நீக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அதன் மூலம் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு €1 பில்லியன் (கிட்டத்தட்ட S$1.48 பில்லியன்) வரிச் சுமை குறையும்.
27 நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பின் வர்த்தகக் கொள்கைகளை நிர்வகிக்கும் ஐரோப்பிய ஆணையம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கான தனது மொத்த ஏற்றுமதி 33 விழுக்காடு வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.
சேவைத்துறையைப் பொறுத்தவரை, தொலைத்தொடர்பு, நிதிச் சேவைகளுக்கான கூடுதல் வாய்ப்புகளை ஐரோப்பிய ஒன்றியம் பெறும்.
அதே நேரத்தில், ஒயின் (Wine), ஸ்பார்க்ளிங் ஒயின், பழங்கள், காய்கறிகள் போன்ற வேளாண்மை சார்ந்த பொருள்களுக்கு ஒப்பந்தம் நடப்புக்கு வந்த முதல் நாளிலிருந்தே ஆஸ்திரேலியா விதிக்கும் வரிகள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறையும்.
பாலாடைக்கட்டி (Cheese) வகைகளுக்கான வரிகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக நீக்கப்படும்.

