சிட்னி: ஒரு திறன்பேசிச் செயலி மூலம் பயனர்களின் தரவுகளைச் சேகரித்ததற்காக ஃபேஸ்புக் உரிமையாளர் ‘மெட்டா’ நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் $17.93 மில்லியன் ($20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்) அபராதம் விதித்துள்ளது.
அந்தச் செயலி தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு வழி என்று மெட்டா விளம்பரம் செய்திருந்தது.
மெட்டாவுக்கு எதிராகப் பொது வழக்கு தொடுத்த ஆஸ்திரேலிய போட்டித்திறன், பயனீட்டாளர் ஆணையத்தின் சட்டச் செலவுகளுக்கு 400,000 ஆஸ்திரேலிய டாலர் தருமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மெட்டாவின் ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ தரவுப் பகுப்பாய்வு நிறுவனம் 2016 அமெரிக்கத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பயனர் தரவுகளை மெட்டா கையாளும் விதம் குறித்து ஆஸ்திரேலியாவில் அது எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகளில் ஒன்றை இந்த அபராதம் முடிவுக்குக் கொண்டு வந்தது.
ஆஸ்திரேலியத் தகவல் ஆணையர் அலுவலகம் தொடுத்துள்ள பொது வழக்கை மெட்டா இன்னும் எதிர்நோக்குகிறது.
2016 தொடக்கத்திலிருந்து 2017 இறுதிவரை, ஃபேஸ்புக் என அப்போது அழைக்கப்பட்ட இந்நிறுவனம், தனிப்பட்ட தகவலை பத்திரமாக வைத்திருப்பதற்கான ஒருவழியாக ‘ஒனாவா’ எனும் ‘விபிஎன்’ சேவையை விளம்பரப்படுத்தியது. இந்த ‘விபிஎன்’ சேவை, இணையப் பயனரின் கணினிக்கு இணையத்தில் மாறுபட்ட முகவரியைக் கொடுத்துப் பாதுகாக்கும்.
ஆனால், ஃபேஸ்புக் நிறுவனம் ஒனாவாவைப் பயன்படுத்தி, பயனர்கள் திறன்பேசியில் மற்ற செயலிகளைப் பயன்படுத்திய தகவல்களையும், அவர்கள் பார்வையிட்ட இணையத்தளங்களையும் தனது சொந்த விளம்பர நோக்கங்களுக்காகச் சேகரித்ததாக நீதிபதி வெண்டி ஆப்ரகாம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.