சிட்னி: ஆஸ்திரேலியாவில் மதுபானமான ‘பீர்’ மீதான வரி உயர்வைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் சனிக்கிழமையன்று (மார்ச் 1) அறிவித்தார்.
அந்நாட்டில் மே மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், ஆளும் தொழிலாளர் கட்சிக்குச் செல்வாக்கு சரிந்து வருவதாகக் கூறப்பட்டது.
உலகின் தனிநபர் வருமானத்தில் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. மேலும், மதுபானத்திற்காக அதிக செலவு செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் அது உள்ளது.
அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை விட ஆளும் இடதுசாரி கட்சிக்கு ஆதரவு குறைந்துவருவதாக அண்மைய கருத்துக்கணிப்பில் தெரியவந்தது.
இதற்கு, மதுபான உற்பத்தியாளர்கள்மீது ஆண்டிற்கு இருமுறை விதிக்கப்படும் வரி உயர்வு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
“பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தலைமையிலான அரசாங்கம் மதுபானமான ‘பீர்’ மீது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விதிக்கப்படும் கலால் வரியை முடக்கும். இந்த அறிவிப்பு மதுபானம் தயாரிப்பாளர்களுக்கும் விருந்தோம்பல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் கிடைத்த வெற்றி” எனத் திரு அல்பனிஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
வரும் ஆகஸ்ட்டில் நடைமுறைக்குவரும் இந்நடவடிக்கை, ஆஸ்திரேலியாவில் உள்ள மதுபானக் கூடங்கள், கேளிக்கை விடுதிகளின் விலைகளைக் குறைப்பது மட்டுமன்றி, உள்ளூர் வர்த்தகத்தையும் வட்டாரச் சுற்றுலாவையும் ஆதரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.