சிட்னி: ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் மே மாத பொதுத் தேர்தலில் வீட்டு விலைகள் முக்கிய தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதைச் சமாளிக்க அந்நாட்டு அரசாங்கம் முதல் வீடு வாங்குவோருக்கு உதவி புரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
அதன்படி, பிரதமர் ஆண்டனி அல்பனிசின் மிதவாத இடதுசாரி அரசாங்கம் 2030ஆம் ஆண்டுக்குள் 1.2 மில்லியன் வீடுகளைக் கட்டித்தர உறுதி கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் குறித்து பலர் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் அரசின் இந்த முடிவு வீட்டு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 25ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள புதிய வரவுசெலவுத் திட்டத்துக்கு முன்னதாக, சனிக்கிழமை (மார்ச் 22ஆம் தேதி) அரசாங்கம் குறைந்த அளவிலான வைப்புத் தொகை, சிறிய அளவிலான வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க உள்ளவர்களுக்கு உதவும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதை வருமான, விலைக் கட்டுப்பாட்டத் திட்டம் என அது தெரிவித்துள்ளது.
“இந்த மாற்றங்கள் முதல் வீடு வாங்குவோருக்கு உதவும். இந்தத் திட்டத்தின்கீழ் 5 மில்லியன் வீடுகள் கொண்டுவரப்படும்,” என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த வீட்டு உதவித் திட்டம் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

