ஈரானியக் காற்பந்து வீராங்கனைகளுக்கு அடைக்கலம் தந்தது ஆஸ்திரேலியா

ஈரானியக் காற்பந்து வீராங்கனைகளுக்கு அடைக்கலம் தந்தது ஆஸ்திரேலியா

2 mins read
e65cd6d5-0aec-4549-a042-a9165c55865e
தென்கொரியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்திற்கு முன்பு, ஈரானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஈரானிய விளையாட்டாளர்கள் மௌனமாக இருந்ததை ஈரானிய ஒலிபரப்புக் கழகத்தின் வருணனையாளர் ஒருவர், அவமதிப்பின் உச்சம் என்று குறிப்பிட்டிருந்தார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஈரானிய மகளிர் காற்பந்துக் குழுவைச் சேர்ந்த ஐந்து வீராங்கனைகளுக்கு அடைக்கலம் தர ஆஸ்திரேலியா இணங்கியுள்ளது.

ஈரானில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படக்கூடும் என்று அஞ்சியதைத் தொடர்ந்து அவர்கள் ஆஸ்திரேலியாவிடம் தஞ்சம் நாடினர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிசிடம் பேசியதாகக் கூறியதைத் தொடர்ந்து கேன்பராவின் அறிவிப்பு வந்துள்ளது.

எஞ்சிய விளையாட்டாளர்கள் கோல்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்தார். அவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு வாய்ப்பளிக்க முன்வந்ததாகத் திரு பர்க் சொன்னார்.

“ஈரானிய மகளிர் காற்பந்துக் குழுவின் ஐந்து உறுப்பினர்களிடம் ஆஸ்திரேலியாவில் தங்கும்படி நான் கூறினேன். இங்கு அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்றும் சொந்த நாட்டைப் போன்றே அவர்கள் கருதிக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னேன்,” என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஈரானிய மகளிர் காற்பந்துக் குழு, ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவில் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் இருந்த ஐந்து விளையாட்டாளர்கள் ரகசியமாக ஹோட்டலைவிட்டு அந்நாட்டுக் காவல்துறையினருடன் சென்றதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்தது.

ஈரானியக் குழுவினரைத் தாயகம் திரும்புவதற்கு ஆஸ்திரேலியா அனுமதித்தது மாபெருந்தவறு என்று திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் முதலில் கூறியிருந்தார். திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் வீராங்கனைகள் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும் ஆஸ்திரேலியாவால் முடியாவிட்டால் அமெரிக்கா அவர்களை ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் வெளியிட்ட பதிவில், ஆஸ்திரேலியப் பிரதமருடன் தாம் பேசியதாகவும் நெருடலான நிலைமையை அவர் மிக நல்ல முறையில் கையாள்வதாகவும் அதிபர் டிரம்ப் பாராட்டினார்.

தென்கொரியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்திற்கு முன்பு, ஈரானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஈரானிய விளையாட்டாளர்கள் மௌனமாக இருந்தனர். அதனை ஈரானிய ஒலிபரப்புக் கழகத்தின் வருணனையாளர் ஒருவர், அவமதிப்பின் உச்சம் என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்