தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லெபனானில் உள்ள தனது குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா உதவி

1 mins read
7aefb3be-5b1e-4d08-93bb-604b9d5ef3bc
ஆஸ்திரேலியா தனது குடிமக்கள், நிரந்தரவாசிகள், அவர்களின் குடும்பத்தார் ஆகியோருக்கு விமானங்களில் 580 இருக்கைகளை ஒதுக்கியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் பெனி வோங் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: லெபனானிலிருந்து தனது குடிமக்களை வெளியேற்ற, ஆஸ்திரேலியா நூற்றுக்கணக்கான விமான இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பெனி வோங் கூறியிருக்கிறார்.

லெபனானில் எஞ்சியிருக்கும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களை வாய்ப்பு இருக்கும்போதே அங்கிருந்து வெளியேறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

லெபனானைவிட்டு வெளியேற விரும்பும் ஆஸ்திரேலியக் குடிமக்கள், நிரந்தரவாசிகள், அவர்களின் குடும்பத்தார் ஆகியோருக்கு அக்டோபர் 3, 5ஆம் தேதிகளில் புறப்படும் விமானங்களில் 580 இருக்கைகள் ஒதுக்கப்படுவதாக திருவாட்டி வோங் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினர். வாரத் தொடக்கத்திலும் விமானச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

லெபனானைவிட்டு வெளியேற விரும்புவதாக கிட்டத்தட்ட 1,700 ஆஸ்திரேலியர்களும் தங்களின் குடும்பத்தாரும் அரசாங்கத்திடம் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.

லெபனானில் ஏறக்குறைய 15,000 ஆஸ்திரேலியர்கள் வசிப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சு கூறியது.

“அங்குள்ள நிலைமை மோசமடைவது குறித்து நாங்கள் மிகுந்த கவலையில் இருக்கிறோம். பெய்ரூட் விமான நிலையம் மூடப்பட்டால், அங்கிருந்து வெளியேறுவதற்கான சாத்தியம் மேலும் குறைந்துவிடும்,” என்றார் திருவாட்டி வோங்.

லெபனானில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் சண்டைநிறுத்தத் திட்டத்துக்கான தமது ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இஸ்ரேல் அந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்