ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா கட்டணம் அதிகரிப்பு; ஆசியானுக்கு விதிவிலக்கு

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா கட்டணம் அதிகரிப்பு; ஆசியானுக்கு விதிவிலக்கு

2 mins read
d84ea889-b077-4a05-8880-9bd14392c9ee
ஆஸ்திரேலியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிட்னி பல்கலைக்கழகம். - படம்: சிட்னி பல்கலைக்கழகம்
Google News Preferred Icon

சிட்னி: தங்கள் நாட்டுக்குக் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா 25 விழுக்காடு உயர்த்தியுள்ளது.

எனினும், தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்காசிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா அதன் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள முயல்வதே அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் படிப்பதற்கான விசா விண்ணப்பக் கட்டணத்தை 2,000 ஆஸ்திரேலிய டாலரிலிருந்து (1,810 வெள்ளி) 2,500 ஆஸ்திரேலிய டாலராக அந்நாட்டு அரசாங்கம் இம்மாதம் மூன்றாம் தேதி அதிகரித்தது. அதேவேளை, முதன்முறையாக ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கட்டண உயர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசியான் மாணவர்களுக்குக் குறைவான கட்டண உயர்வு

தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கூடுதலாக 50 ஆஸ்திரேலிய டாலர் செலுத்தினால் போதும். பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காக அந்தக் கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் உலகிலேயே ஆக அதிகமானது. ஒப்புநோக்க அமெரிக்காவில் கட்டணம் 535 டாலராகவும் (690 வெள்ளி) பிரிட்டனில் 558 பவுண்டாகவும் (959 வெள்ளி) உள்ளன.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு அதிகமானோர் ஆஸ்திரேலியாவில் குடியேறுகின்றனர். அதைக் கையாள வெளிநாட்டு மாணவர் விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர் விசா கட்டணம் 710லிருந்து 1,600 ஆஸ்திரேலிய டாலருக்கு உயர்த்தப்பட்டது. பிறகு சென்ற ஆண்டு ஜூலை மாதம் 2,000 ஆஸ்திரேலிய டாலருக்கு உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தென்கிழக்காசியாவைத் தொடர்புகொள்ளும் முயற்சிகளை வலுப்படுத்த விசா கட்டண உயர்விலிருந்து ஆசியான் மாணவர்களுக்கு விதிவிலக்கு அளித்ததாக அந்நாட்டின் அனைத்துலகக் கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

ஏற்கெனவே சில நாடுகளுக்குக் குறைவான கட்டணம்

ஏற்கெனவே திமோர் லெஸ்டே உள்ளிட்ட பசிபிக் வட்டார நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை ஆஸ்திரேலியா குறைவாக வைத்திருந்தது. கட்டணம் 745 ஆஸ்திரேலிய டாலராக இருந்தது.

திமோர் லெஸ்டே சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஆசியானில் இணைந்தது.

“ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விசா கட்டணம் குறைவாக இருப்பது தென்கிழக்காசிய வட்டாரத்திலிருந்து தரமான மாணவர்களை வரவேற்பதற்கு ஆஸ்திரேலியா அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது,” என்றார் திரு ஹில்.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஆஸ்திரேலியாகல்விவிசாகட்டணம்