சிட்னி: மத்திய கிழக்கில் போர் தொடர்வதால் ஆஸ்திரேலியாவின் விநியோகச் சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் பாதுகாப்பைப் பலப்படுத்தும் முயற்சியாக ஆஸ்திரேலியா தனது ஏற்றுமதி-நிதி சட்டங்களைத் திருத்துகிறது.
இதுகுறித்த தகவலை ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் சனிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா அதன் எரிபொருள் தேவையில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது. ஈரானுடனான போரை அமெரிக்கா-இஸ்ரேல் தொடர்வதால் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அளவில் சில இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
“எரிபொருளைக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் புதிய விதிமுறைகளை உருவாக்கும். இதன் மூலம் உள்ளூர் எரிபொருள் விநியோகம் அதிகரிக்கும்” என்று திரு அல்பனீஸ் கூறினார்.
புதிய எரிபொருள் பாதுகாப்பு விதிமுறைப்படி தனியார்த் துறையினர் எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் நிதி உதவிகளுக்கு உத்தரவாதம் கொடுக்கும்.
“தனது தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் வரும் திங்கட்கிழமை (மார்ச் 30) நாடாளுமன்றத்தில் ஏற்றுமதி-நிதி மற்றும் காப்பீட்டு-நிறுவன சட்டங்களில் திருத்தங்களை அறிமுகப்படுத்தும்,” என்று திரு அல்பனீஸ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் 39 நாள்களுக்குத் தேவையான பெட்ரோலும், 30 நாள்களுக்குத் தேவையான டீசல் மற்றும் விமான எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தித் துறை அமைச்சர் கிறிஸ் போவன் சனிக்கிழமை தெரிவித்தார்.

