கோலாலம்பூர்: ஆஸ்திரேலியா தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 20 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஆசியான் வட்டாரத்தில் தனது பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துவருகிறது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா - தென்கிழக்கு ஆசிய வட்டாரத்திற்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 6 பில்லியன் டாலரை எட்டியதைக் குறிப்பிட்டார் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ். சிறப்பாக வர்த்தகம் நடப்பதால் கட்டமைப்புகளை முன்னேற்றும் நோக்கில் தற்போது கேன்பரா அதிக முதலீடு செய்வதாக அவர் கூறினார்.
“ஆசியான் வட்டாரத்தில் பல வாய்ப்புகள் உள்ளதைப் புரிந்துகொண்டோம். லாவோஸ் நாட்டில் வேளாண்மை சார்ந்த முதலீடுகள், தாய்லாந்தில் மின்சக்தி முதலீடுகள், வியட்நாமில் உள்கட்டமைப்பு சார்ந்த முதலீடுகள் ஆகியவற்றில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்தும். மற்ற தென்கிழக்காசிய நாடுகளில் போக்குவரத்து மற்றும் தொடர்புச் சங்கிலியில் முதலீடு இருக்கும்,” என்றார் திரு அல்பனீஸ்.
ஆசியான்- இந்தோ பசிபிக் கலந்துரையாடல் 2025 நிகழ்ச்சியில் பேசியபோது, திரு அல்பனீஸ் ஆஸ்திரேலியாவின் திட்டங்கள் குறித்து விவரித்தார்.
ஆஸ்திரேலியா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் [Ϟ]கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக வர்த்தக விசாக்கள், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு நீக்குப்போக்கான திட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து வருகிறது என்று திரு அல்பனீஸ் கூறினார்.
குவாட் மாநாடு
இதற்கிடையே குவாட் மாநாடு அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் நடக்கலாம் என்று திரு அல்பனீஸ் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.
குவாட் அமைப்பில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு இந்தியா தலைமை ஏற்று குவாட் மாநாட்டை நடத்தவிருந்தது, ஆனால் இப்போது அது சற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ‘ஏபெக்’ உச்சநிலை மாநாடு உள்ளிட்ட பல மாநாடுகளுக்குச் செல்வதால் அவருக்கு 2025ஆம் ஆண்டில் குவாட் சந்திப்பில் கலந்துகொள்ள நேரமில்லை. அதனால் அடுத்த ஆண்டுக்குச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது,” திரு அல்பனீஸ் கூறினார்.
தென்கொரியா நம்பிக்கை
இதற்கிடையே ஆசியான்+3 அமைப்பு அதன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தென்கொரியா கேட்டுக்கொண்டுள்ளது.
ஆசியான்+3 அமைப்பில் ஆசியான் நாடுகளுடன் தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளும் உள்ளன.
“வர்த்தகத்தில் நாடுகளின் தற்காப்புக் கொள்கை, தொடர்பு சங்கிலிகளில் வரும் மாற்றம் உள்ளிட்டவை தற்போது சவாலாக உள்ளன. அதனால் ஆசியான்+3 அமைப்பு ஒற்றுமையுடன் செயல்பட்டு தொடர்ந்து வளர்ச்சி காண வேண்டும்,” என்று தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் கூறினார்.

