சிட்னி: நச்சுக் காளானை உணவில் கலந்து மாமியார், மாமனார் உட்பட மூவரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு 33 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
எரின் பேட்டர்சன், 50, எனப்படும் அந்தப் பெண் கடந்த 2023ஆம் ஆண்டு அந்தக் குற்றத்தைச் செய்தார்.
நச்சுக் காளான் கலந்த அசைவ உணவை அந்தப் பெண்ணின் கணவரும் சாப்பிட்டார். இருப்பினும் உடல்நலப் பாதிப்புகளுடன் அவர் உயிர்பிழைத்தார்.
மெல்பர்ன் நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லியோங்கத்தா என்னும் நகரில் நடைபெற்ற அந்தச் சம்பவம் குறித்த விசாரணை முடிவுற்ற திங்கட்கிழமை (செப்டம்பர் 8) தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளியின் செயலால் மூன்று உயிர்கள் பறிபோனதோடு கணவருக்கு நீண்டகால உடல்நலப் பாதிப்பையும் ஏற்படுத்தியதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு நச்சுத் தன்மை வாய்ந்த காளானை மதிய உணவில் கலந்ததால் அதனை உண்ட மாமியார் கெயில் பேட்டர்சன், மாமியார் டோனல்ட் பேட்டர்சன், மாமியாரின் சகோதரி ஹீதர் வில்கின்சன் ஆகியோர் உயிரிழந்தனர். மூவரும் முதியோர். கணவர் இயன் வில்கின்சன் உயிர்பிழைத்தார்.
வழக்கு விசாரணையின்போது பெரும்பாலும் அமைதியாகவே காணப்பட்ட குற்றவாளி எரின் பேட்டர்சன், நச்சுக் காளான் உணவுச் சம்பவம் தற்செயலாக ஒரு விபத்து போல நடந்ததாக இதற்கு முன்னர் தெரிவித்து இருந்தார்.
அந்தப் பெண் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 28 நாள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

