ஆஸ்திரேலியாவில் விழுந்து நொறுங்கிய விமானம்; மூவர் மரணம்

1 mins read
0a3a7b62-1884-4dd2-896f-bbc47aa24688
விமானத்தில் ஆறு பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். - படம்: இணையம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பெர்த் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ரோட்னஸ்ட் தீவில் சிறிய வகை விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.

இந்தச் சம்பவம் ஆஸ்திரேலிய நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) பிற்பகல் நிகழ்ந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

விமானத்தில் ஆறு பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

இரண்டு சுற்றுப்பயணிகளும் விமானியும் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மூன்று சுற்றுப்பயணிகள் காயமடைந்தனர்.

மாண்ட சுற்றுப்பயணிகள் சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர் ரோஜர் கூக் மரணமடைந்தோரின் குடும்பத்தாருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

விடுமுறைக்காக ரோட்னஸ்ட் தீவுக்குச் சென்றிருந்த குடும்பங்களின் கண் முன்னே விமானம் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டதாகத் திரு கூக் கூறினார்.

விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்