தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணையத்தில் பாலியல் தொடர்பான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் ஆஸ்திரேலியா முனைப்பு

2 mins read
ec51d900-d118-4bb9-b3f9-bdc642d71a2b
பாலியல் தொடர்பான செயலிகள் இணையத்தில் வெகுவாகப் பரவுகின்றன. சிறுவர்களை இலக்காகக் கொண்ட அவற்றின் தொடர்பான மோசடிகள் பெருகிவருவது குறித்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: இணையத்தில் நிர்வாணப் படங்களை உருவாக்கவும் பெண்களைப் பின்தொடரவும் பயன்படுத்தக்கூடிய சாதனங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தப்போவதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்படும் அத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்த அந்நாடு முனைகிறது.

அதன் தொடர்பில் தொழில்துறையினருடன் இணைந்து புதிய சட்டத்தை இயற்றப்போவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் சொன்னது. அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் அதற்கான கால அட்டவணை எதுவும் குறிப்பிடப்படவில்லை.

“மக்களை, குறிப்பாகப் பிள்ளைகளை, அவமானப்படுத்தவும் துன்புறுத்தவும் தவறாகப் பயன்படுத்தவும் உதவுகின்ற செயலிகளுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் இடமில்லை,” என்று தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு சில செயலிகள் ஒருவரின் உடையை மின்னிலக்க முறையில் அகற்றிவிடுகின்றன. பாலியல் தொடர்பான அத்தகைய செயலிகள் இணையத்தில் வெகுவாகப் பரவுகின்றன. சிறுவர்களை இலக்காகக் கொண்ட அவற்றின் தொடர்பிலான செயல்பாடுகள் பெருகிவருவது குறித்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

அத்தகைய தீங்கு விளைவிக்கும் செயலிகளை அணுகுவதற்குரிய வழிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்யும் என்றார் திருவாட்டி வெல்ஸ். அத்தகைய செயலிகளை இணையத்தில் தடுத்துநிறுத்துவது தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்பு என்றார் அவர்.

இணையத்தில் பிள்ளைகளைத் துன்புறுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்துவதில் உலக அளவில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது.

16 வயதுக்குக் குறைந்தவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டத்தைச் சென்ற ஆண்டு (2024) நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டது.

இவ்வாண்டு இறுதியில் அந்தச் சட்டம் நடப்புக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்