ஆஸ்திரேலியா பறவைக் காய்ச்சல் சோதனைகளைத் தீவிரப்படுத்துகிறது

ஆஸ்திரேலியா பறவைக் காய்ச்சல் சோதனைகளைத் தீவிரப்படுத்துகிறது

1 mins read
f66dceb2-7f48-4479-870d-23e6b25db629
மேற்கு ஆஸ்திரேலியாவில் மாண்ட அல்லது நோய்வாய்ப்பட்ட 94 பறவைகளிலிருந்து, 11 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: மிக வீரியமிக்க ‘எச்5என்1’ பறவைக் காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய அதிகாரிகள் கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேவேளையில், அண்டை நாடான பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துக் கோழிப்பண்ணை இறக்குமதிகளையும் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் ‘எஸ்பரன்ஸ்’ நகருக்குக் கிட்டத்தட்ட 1,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘ஃபவுலர்ஸ் பே’ அருகே, திங்கட்கிழமை (ஜூன் 22) இரண்டு அண்டார்டிகா பகுதி கடல் பறவைகளும் ஒரு ‘பெலிக்கன்’ பறவையும் மாண்டுகிடந்ததாக ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனமான ‘ஏபிசி’ கூறியது. முன்னதாக, ‘எஸ்பரன்ஸ்’ நகரில்தான் முதல் இரண்டு பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.

அதை அடுத்து, தெற்கு ஆஸ்திரேலியாவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பறவைகளின் மாதிரிகளிலிருந்து சோதனை முடிவுகள் வெளிவர இன்னும் சில நாள்கள் ஆகலாம் என்று தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் முதன்மைத் தொழில்கள் துறை அமைச்சர் கிளேர் ஸ்கிரிவன் ஏபிசி வானொலியிடம் தெரிவித்தார்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் எதுவும் உறுதிசெய்யப்படவில்லை என்று முதன்மைத் தொழில்கள் துறைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இருப்பினும், நோய்வாய்ப்பட்ட அல்லது மாண்ட பறவைகள் குறித்து வரும் எந்தவொரு புகாரும் விசாரிக்கப்படும் என்றும் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால், அதுகுறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்