துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைக் கடுமையாக்கிய ஆஸ்திரேலியா

1 mins read
d909dd51-d476-4475-bc43-d55ebc86f231
சிட்னியில் உள்ள போண்டாய் கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாண்டோருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியா அதன் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைக் கடுமையாக்கி உள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 20) அறிவிப்பு செய்தது.

கடந்த மாதம் சிட்னியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போண்டாய் கடற்கரையில் யூத விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் மாண்டனர்.

“நெஞ்சில் வெறுப்புணர்வும் கையில் துப்பாக்கியுடனும் இருந்த தனிநபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது,” என்று புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியபோது ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி புர்க் கூறினார்.

போண்டாய் கடற்கரையில் நிகழ்ந்த துயரச் சம்பவம் காரணமாக முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் அவசியம் ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கு ஏறப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

புதிய சட்டங்களின்கீழ் துப்பாக்கிகளைத் திரும்ப வாங்கிக்கொள்ளும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தேவைக்கும் அதிகமாக உள்ள துப்பாக்கிகளையும் புதிதாகத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் அவற்றை வைத்திருப்போரிடமிருந்து திரும்ப வாங்கிக்கொள்வதை இந்தத் திட்டம் வகை செய்யும்.

ஆயுத உரிமத்துக்கு ஒருவர் விண்ணப்பம் செய்யும்போது அவரது பின்னணி முன்பைவிட கூடுதலாக அலசி ஆராயப்படும்.

இதற்காக ஆஸ்திரேலியப் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பிடமிருந்து தகவல்கள் பெறப்படும்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் இல்லாத அளவில் 4.1 மில்லியன் ஆயுதங்கள் இருந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்