சிட்னி: அழியும் அபாயமுள்ள பட்டியலில் இருந்து ஆஸ்திரேலியாவின் ‘பெருந்தடுப்பு (கிரேட் பேரியர்)‘ கடலடிப் பாறைத்திட்டுகளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (யுனெஸ்கோ) மரபுடைமைக் குழு செவ்வாய்க்கிழமை நீக்கியது.
மேலும், சுற்றுச்சூழல் மாசுபடுதல், பெருங்கடல்கள் வெப்பமயமாதல் போன்றவற்றால் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை சூழலமைப்பு அழியும் நிலையில் இருப்பதாக அந்தக் கழகம் எச்சரித்துள்ளது.
நாட்டின் பொருளியலுக்கு கிட்டத்தட்ட S$5.4 பில்லியன் பங்களிப்பையும் 64,000 வேலைவாய்ப்புகளையும் வழங்கும் ‘கிரேட் பேரியர்‘ பாறைத்திட்டுகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக முயன்று வருகிறது.
இந்தப் பாறைத்திட்டுகள் அழியும் அபாயமுள்ள பட்டியலில் சேர்ந்துவிட்டால் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் உலக மரபுடைமைச் சின்னம் என்னும் தகுதியை அது இழந்துவிடும்.
கடந்த நவம்பர் மாதம், இந்தப் பாறைத்திட்டுகளை அழியும் அபாயமுள்ள பட்டியலில் சேர்க்க வேண்டும் என யுனெஸ்கோ தெரிவித்திருந்தது.
ஆனால், அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் பாறைத்திட்டுகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் அவ்வமைப்பு பாராட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“பருவநிலை மாற்றத்தைக் கையாள்வது, நீரின் தரத்தை மேம்படுத்துவது, பவளப் பாறைகளை உண்ணும் மீன்களைப் பிடிப்பது ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாறைத்திட்டுகளை வலுவான, நிலைத்தன்மைமிக்க பாதையில் கொண்டுசெல்கின்றன,” என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிஸ் ஊடகச் சந்திப்பின்போது கூறினார்.
2024ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் ‘முன்னேற்ற அறிக்கை’யைச் சமர்ப்பிக்குமாறு யுனெஸ்கோ மரபுடைமைக் குழு ஆஸ்திரேலிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதைச் செய்யத் தவறினால், யுனெஸ்கோ ‘கிரேட் பேரியர்’ பாறைத்திட்டுகளை அழியும் அபாயமுள்ள பட்டியலில் சேர்த்துவிடும் என ஆஸ்திரேலியாவின் இயற்கைக்கான அனைத்துலக நிதியம் தெரிவித்தது.