தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலிக்குப் போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியக் கும்பலில் ஐவர் விடுதலை

2 mins read
d18b26e6-c5dd-4d4c-8379-a3c6510bf78d
ஆயுள் தண்டனை முடிந்த ஐவரும் பாலி அனைத்துலக விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு. - படம்: இபிஏ

சிட்னி: இந்தோனீசியாவின் பாலித் தீவில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட ‘பாலி நைன்’ (Bali Nine) ஆஸ்திரேலியக் கும்பலைச் சேர்ந்த ஐவர் தண்டனை முடிந்து நாடு திரும்பினர்.

விடுமுறை உல்லாசத் தீவான பாலிக்குள் கடந்த 2005ஆம் ஆண்டு 8 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்ததற்காக ஒன்பது பேர் அடங்கிய அந்த ஆஸ்திரேலியக் கும்பலை இந்தோனீசிய காவல்துறை அப்போது கைது செய்தது.

அவர்களில் இருவருக்கு 2015ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எஞ்சிய எழுவரில் டான் டுக் தான் நுயுன் எனப்படும் வியட்னாமிய ஆஸ்திரேலியர் 2018ஆம் ஆண்டு புற்றுநோயால் இறந்துவிட்டார்.

கும்பலில் இடம்பெற்ற ஒரே பெண்ணான ரானே லாரன்சின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுவிட்டார்.

ஒன்பது பேரில் ஆகக் கடைசி ஐவரும் கடுமையான ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த ஐவரும் தண்டனைக் காலம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாடு திரும்பியதை ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனிஸ் உறுதி செய்தார்.

ஐந்து பேரையும் நல்லமுறையில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்ததற்காக இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுக்கு திரு அல்பனிஸ் நன்றி தெரிவித்தார்.

‘பாலி நைன்’ விவகாரத்தால் ஆஸ்திரேலிய-இந்தோனீசிய உறவில் நீடித்து வந்த விரிசல் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

“சட்டவிரோதப் போதைப்பொருள்கள் தொடர்புடைய கடுமையான பிரச்சினையைக் கையாள்வதில் இந்தோனீசியாவுக்கு இருக்கும் அக்கறையை ஆஸ்திரேலியா பகிர்ந்துகொள்கிறது,” என்று திரு அல்பனிஸ் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்