சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதங்களில் குரங்கம்மை சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. குறைந்த தடுப்பூசி விகிதங்கள் நகரங்களுக்கு வெளியே குரங்கம்மை சம்பவங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஒரு சுகாதார நிபுணர் கவலை தெரிவித்தார்.
2024ல் இதுவரை ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட 737 குரங்கம்மை சம்பவங்களில் பெரும்பாலானவை கடந்த சில மாதங்களில் நிகழ்ந்தவை.
ஒப்புநோக்க, 2023ல் 26 சம்பவஙகளும் 2022ல் 144 சம்பவங்களும் நிகழ்ந்தன. 2024ன் புதிய வழக்குகளில் பெரும்பாலானவை தென்கிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்தன என்றும் இரண்டு சம்பவங்களைத் தவிர மற்ற அனைத்திலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2024 முதல் குரங்கம்மை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய சுகாதார, முதியோர் பராமரிப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி-யிடம் தெரிவித்தார்.
யார் யார் எல்லாம் தடுப்பூசி போடலாம் என்பதற்கான கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலியா நீக்கியுள்ளது. இது குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ள அனைத்து வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கிறது.
தடுப்பூசி விகிதம் குறைவாக உள்ள பெருநகரங்களுக்கு வெளியே கிருமி கண்டறியப்பட்டுள்ளது என்று சிட்னியின் பொதுநல மருத்துவர் டாக்டர் மேத்யூ ஷீல்ட்ஸ் அந்நாட்டின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்திடம் தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை, பாதிக்கப்பட்ட விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் கிருமிகளால் ஏற்படுகிறது. இது நெருங்கிய உடல் தொடர்பு மூலம் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது.
சில சந்தர்ப்பங்களில் உயிர்கொல்லியாகவும் மாறும் இக்கிருமி, காய்ச்சல், தசைவலி, தோலில் கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 2022ல், குரங்கம்மை நோயை உலக சுகாதார நிறுவனம், அனைத்துலக ரீதியில் கவலை தரும் பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. இது அதன் மிக உயர்ந்த எச்சரிக்கையாகும்.

