ஆஸ்திரேலியா, அடுத்த மாதம் (செப்டம்பர் 2025) பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருக்கிறது. பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகியவை அத்தகைய முடிவை எடுத்த சில நாள்களில் ஆஸ்திரேலியாவின் அறிவிப்பு வந்துள்ளது.
செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை நாடாய் அங்கீகரிக்கவிருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் கூறினார்.
ராணுவ நடவடிக்கைகளை அகற்றவும் பொதுத் தேர்தலை நடத்தவும் வட்டாரத்தில் நீடித்திருப்பதற்கான இஸ்ரேலின் உரிமையைத் தொடர்ந்து அங்கீகரிக்கவும் பாலஸ்தீன ஆணையம் உறுதி தெரிவித்திருப்பதாக அவர் சொன்னார்.
“மத்திய கிழக்கில் தொடரும் வன்முறையை நிறுத்தவும் காஸாவில் போர், துயரம், பசி, பட்டினி ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவரவும் இரு நாட்டுத் தீர்வே வழி என்பது மனித இனத்தின் பெரிய நம்பிக்கை,” என்று திரு அல்பனீஸ் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) தெரிவித்தார்.
காஸாவில் போரை நிறுத்தும்படி உலக அளவில் இஸ்ரேல் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்தால் அது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதைப் போலாகிவிடும் என்கிறது இஸ்ரேல்.
சென்ற ஆண்டு ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே ஆகியவை பாலஸ்தீனத்தை அதிகாரபூர்வமாக ஒரு நாடாய் ஏற்றுக்கொண்டன.
தற்போது ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் உறுப்பியம் பெற்றுள்ள 193 நாடுகளில் கிட்டத்தட்ட 147, பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கின்றன.