சிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கான மாணவர் கடனை 20 விழுக்காடு குறைக்கப் போவதாக நவம்பர் 3ஆம் தேதியன்று அறிவித்தார்.
அப்படி 20 விழுக்காடு குறைக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு 16 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$13.9) இழப்பு ஏற்படும்.
கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் விரிவாக்கமாக இது இடம்பெறுகிறது. வாழ்கைச் செலவினத்தைக் குறைப்பது, மாணவர் கடனுக்கு நிவாரணம் அளிப்பது, மலிவான மருந்துகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
“தற்போது மாணவர் கடனில் உள்ள அனைவருக்கும் இது உதவும். வரும் ஆண்டுகளில் மாணவர்களுக்கு மேலும் உதவிகள் வழங்குவதற்காகப் பாடுபடுவோம்,” என்று தனது அறிக்கையில் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் குறிப்பிட்டார்.
இந்த மாற்றம் காரணமாக, ஒரு பட்டதாரி மாணவரின் 27,600 ஆஸ்திரேலிய டாலர் கடனில் 5,520 ஆஸ்திரேலிய டாலர் குறையும் என்று அரசாங்கம் தெரிவித்தது.
இந்தக் கடன் குறைப்பு திட்டம் 2025ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நடப்புக்கு வரும் என்றும் அது கூறியது.

