இஸ்ரேலிய அதிபரின் வருகைக்கு ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு; 27 பேர் கைது

இஸ்ரேலிய அதிபரின் வருகைக்கு ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு; 27 பேர் கைது

2 mins read
f596365c-514d-40ad-b702-197e81ca3e64
சிட்னியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) ஆர்ப்பாட்டம் செய்தோரை அகற்றிய காவல்துறையினர். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்ஸோகின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் சண்டை மூண்டதைத் தொடர்ந்து 27 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதிகாரிகளைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்பட்ட 10 பேரும் அவர்களில் அடங்குவர்.

திங்கட்கிழமை (பிப்ரவரி 9) மாலை சிட்னி நகர மண்டபத்திற்கு அருகே குழுமியிருந்த ஆயிரக்கணக்கானோரைக் காவல்துறையினர் அகற்ற முற்பட்டபோது வன்முறை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் செய்தோரில் ஒருவரான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தங்களை அதிகாரிகள் தாக்கியதாகச் சொன்னார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதி காக்குமாறு ஆஸ்திரேலியத் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தனர்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிஸ், வன்முறைச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். அமைதியான முறையில் கருத்துகளை முன்வைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

“ஆஸ்திரேலியர்கள் இரண்டு அம்சங்களைக் கோருகின்றனர். மற்ற நாட்டுப் பிரச்சினைகள் இங்குக் கொண்டுவரப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. இஸ்ரேலியர்களாக இருந்தாலும் பாலஸ்தீனர்களாக இருந்தாலும் மற்றவர்களைக் கொல்லும் செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்,” என்றார் திரு அல்பனிஸ். டிரிப்பிள் எம் எனும் வானொலி நிலையத்திற்கு அளித்த நேர்காணலின்போது அந்த விவரங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

“இத்தகைய செயல்கள், நோக்கங்களை எட்டுவதற்கு உதவுவதைவிட அவற்றைக் கீழறுப்பதற்குக் காரணிகளாக அமைந்துவிடும்,” என்று திரு அல்பனிஸ் எச்சரித்தார்.

வன்முறைச் சம்பவத்தில் எவருக்கும் கடுமையாகக் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று நியூ சௌத் வேல்ஸ் மாநிலக் காவல்துறை வெளியிட்ட அறிக்கை கூறியது.

ஆஸ்திரேலியாவின் போண்டாய்க் கடற்கரையில் சென்ற ஆண்டு (2025) டிசம்பர் மாதம் நடைபெற்ற யூதச் சமய நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து திரு ஹெர்ஸோகின் ஆஸ்திரேலிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக் கணக்கானோர் சிட்னியின் மத்திய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

காவல்துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றனர். சிலர் தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு முன்னேற முற்பட்டனர். கண்ணீர்ப்புகையையும் மிளகுத் தெளிப்பானையும் பயன்படுத்தி அவர்களைக் காவல்துறையினர் அகற்றினர்.

குறிப்புச் சொற்கள்