சிட்னி: ஆஸ்திரேலியா மின்சிகரெட்டுகளை மருத்து வரீதியாக பயன்படுத்த மட்டும் அனுமதி வழங்கவுள்ளது. இதனால், மின்சிகெரட்டுகளுக்கு முழுமையாக தடைவிதிக்கும் முதல் நாடாக ஆஸ்திரேலியா இருக்கும் என்ற நிலைமை தற்போது மாறியுள்ளது.
மின்சிகரெட் பயன்பாட்டுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கடுமையான மசோதா திட்டத்தில் எதிர்தரப்புக் கட்சிகள் சில மாற்றங்கள் வேண்டும் என்று கூறியிருந்தன. அதைத்தொடர்ந்து மருத்துவக் காரணங்களுக்கு மட்டும் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்த மசோதா வடிவமைக்கப்பட்டது.
இன்னும் சில நாள்களில் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம். மசோதா சட்டமாகினால் கடைகளில் மின்சிகரெட்டுகள் விற்கக்கூடாது. மருந்தகங்களில் மட்டுமே அது கிடைக்கும்.
ஆஸ்திரேலியாவில் இளையர்கள் இடையே மின்சிகரெட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் மின்சிகரெட்டுகள் தொடர்பாக 18 வயது முதல் 24 வயது வரையுள்ள இளையர்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் 22 விழுக்காட்டினர் ஒரு முறையாவது மின்சிகரெட்டுகள் தொடர்பான பொருள்களை பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.

