சிட்னி: ஈரானிமீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்களில் ஆஸ்திரேலியா பங்கெடுக்கவில்லை.
எதிர்காலத்திலும் அது சம்பந்தப்படாது என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை (மார்ச் 2) தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் பூசல் பெரிதாக உருவெடுத்தாலும் அங்கு ராணுவ வீரர்களை அனுப்பிவைப்பதை ஆஸ்திரேலியா தவிர்க்கும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் இஸ்ரேலும் ஈரானும் ஒன்றின்மீது ஒன்று ஏவுகணைகளைப் பாய்ச்சி தாக்குதல்களைத் தொடர்கின்றன.
இந்தப் போர் நான்கு வாரங்களுக்குத் தொடரலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை திருவாட்டி பென்னி தெளிவுப்படுத்தியுள்ளார்.
“மத்திய கிழக்கில் நடக்கும் பிரச்சினைகளில் ஆஸ்திரேலியாவிற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை. ஈரான் தாக்குதலில் நாங்கள் பங்கெடுக்கவில்லை. எதிர்காலத்தில் பங்கெடுப்போம் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை,” என்று சேனல் 2 தொலைக்காட்சியிடம் அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்க அரசாங்கம் விமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஆனால், அவ்வட்டாரப் பயணவழிகள் விமானங்களுக்கு மூடப்பட்டிருப்பதால் மக்களை மீட்டுவருவது சிரமமான ஒன்றாகும் என்று தலைநகர் கேன்பராவில் செய்தியாளர்களிடம் திருவாட்டி பென்னி விளக்கினார்.
“நிலைமை மிகவும் சவாலாக இருக்கிறது. பலர் உயிரிழந்துவிட்டனர். பயணப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, விவரங்களைச் சேகரித்து உங்களுக்கு வழங்கி ஆதரவு நல்குவோம்,” என்று அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஏறத்தாழ 115,000 ஆஸ்திரேலியர்கள் மத்திய கிழக்கில் உள்ளனர். வர்த்தக விமானப் பயணங்கள் மீண்டும் தொடங்கினால்தான் அவர்களை மீட்க முடியும் என்ற அமைச்சர் அரசாங்கம் அவர்களைக் காப்பாற்ற மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமா என்ற கேள்வியைத் தவிர்த்துவிட்டார்.

