மின்னஞ்சல் தவற்றால் ஆட்குறைப்பைத் துரிதப்படுத்திய ஆஸ்திரேலிய வங்கி

மின்னஞ்சல் தவற்றால் ஆட்குறைப்பைத் துரிதப்படுத்திய ஆஸ்திரேலிய வங்கி

படம்: ராய்ட்டர்ஸ்

23 Nov 2026 - 5:06 pm

1 mins read

சிட்னி: தேசிய ஆஸ்திரேலிய வங்கி (என்ஏபி) ஆட்குறைப்பு செய்யப்படவிருந்த ஊழியர்களிடம் அதுபற்றி திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே தெரியப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் தகவலை அதிகாரபூர்வமாகத் தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்திய பிறகு அதுகுறித்த மின்னஞ்சலை அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பே திங்கட்கிழமை (நவம்பர் 23) அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக என்ஏபி தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களிடம் அதுபற்றி என்ஏபி முன்கூட்டியே தெரியப்படுத்தவேண்டியிருந்தது.

நிறுவனத்தின் தளங்களுக்குள் செல்லத் தங்களுக்கு இருக்கும் அனுமதி டிசம்பர் மாதம் 2ஆம் தேதி மீட்டுக்கொள்ளப்படும் என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஆஸ்திரேலியன் ஃபைனான்‌ஷியல் ரிவியூ ஊடகம் முன்னதாகச் செய்தி வெளியிட்டது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் அவரவர் மேலாளர்களுக்கும் இடையே இவ்வாரம் சந்திப்புகள் நடைபெறவிருந்தன. அவர்களுக்குத் தொடர்ந்து வேலை இருக்குமா அல்லது குறிப்பிட்ட தொகை வழங்கப்படுமா என்பதைத் தெரிவிக்க அந்தச் சந்திப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக ஆஸ்திரேலியன் ஃபைனான்‌ஷியல் ரிவியூ குறிப்பிட்டது.

“இச்சம்பவத்துக்கு நாங்கள் மிகுந்த மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதுபோல் தானியக்க மின்னஞ்சல் அனுப்பப்படும்போது அது கவலையும் பதற்றத்தையும் பலருக்குத் தரும் என்பதை அறிகிறோம்,” என்று என்ஏபி வருத்தம் தெரிவித்தது.

“எந்த சக ஊழியருக்கும் இந்த இன்னல் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தத் தவற்றால் இந்த மின்னஞ்சல்களைப் பெற்ற எல்லோருக்கும் ஏற்பட்ட மனவுளைச்சலுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றும் அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்