என்ஏபி எனும் நேஷனல் ஆஸ்திரேலியா வங்கி, 2,500 பேரை அடுத்த ஆண்டு ஆட்குறைப்புச் செய்யப்போவதாகச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை, வங்கியின் ஊழியரணியில் கிட்டத்தட்ட 6 விழுக்காடு.
வங்கி, அதன் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் கொடுக்கும் கடன் அதிகரித்துவருவதால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளவும் அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் வணிகக் கடன்களை வழங்கும் ஆகப் பெரிய நிறுவனம் இது. இவ்வாண்டு இறுதிக்குள் 1,500 பணியிடங்கள் வரை நீக்கப்படும் என்றும் வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்கும் ஊழியர்களை விட நிர்வாகப் பணிகளிலேயே ஆட்குறைப்பு அதிகம் இருக்கும் என்றும் வங்கி கூறியுள்ளது. மேலும் ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்களின் சேவைகளை நாடுவதையும் கணிசமாகக் குறைக்க இது திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக, 2027ஆம் ஆண்டில் வரிக்கு முன் கிட்டத்தட்ட 300 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ($268 மில்லியன்) சீரமைப்புச் செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆட்குறைப்பு, மறுபணியமர்த்தல், அமைப்பை மாற்றியமைத்தல் முதலியவற்றுக்கு ஆகும் செலவு அதில் அடங்கும்.
இந்த நடவடிக்கையின் நோக்கம், வங்கியின் செயல்பாடுகளை எளிமையாகவும் திறமையாகவும் மாற்றுவதோடு, உற்பத்தித் திறனையும் இடர்களைக் கையாளுகின்ற திறனையும் மேம்படுத்துவதே என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ இர்வின் கூறினார்.
வங்கியின் அண்மை ஆண்டறிக்கையின்படி, சென்ற ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி, உலக அளவில் 41,880 ஊழியர்கள் அதில் வேலை செய்தனர்.
