சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகப் புதன்கிழமை (ஜனவரி 28) நிலவிய கடும் வெப்பத்தால் காட்டுத் தீ மோசமடைந்தது. அதன் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான கட்டடங்களில் மின்தடை ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது மாநிலம் விக்டோரியா. அங்கு 2009ஆம் ஆண்டுக்குப்பின் மூண்டுள்ள ஆக மோசமான காட்டுத் தீ இது என்று கருதப்படுகிறது.
இந்த வார இறுதிவரை காட்டுத் தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் என்று கருதப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
தொடர்ந்து ஐந்து நாள்களாக நிலவும் கடுமையான வெப்ப அலையின் விளைவுகளை உணர முடிவதாக மாநிலத்தின் நெருக்கடிநேர நிர்வாகப் பிரிவின் ஆணையர் டிம் வீபுஷ் கூறினார்.
தீவிரமான வெப்ப எச்சரிக்கை இன்னும் நடப்பில் இருப்பதாகவும் தொடர்ந்து எட்டு நாள்களுக்கு மிகக் கடுமையான வெப்பம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய வெப்பநிலை வழக்கமற்றது என்றும் பருவநிலை மாற்றத்தால் இவ்வாறு அதிக வெப்பம் வாட்டுகிறது என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வகம் கூறியது.
ஆஸ்திரேலியாவில் இதற்குமுன் 2009 ஜனவரியிலும் 1939 ஜனவரியிலும் இத்தகைய கடுமையான வெப்பம் நிலவியதாகக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) விக்டோரியா மாநிலத்தில் ஏறத்தாழ 20 வானிலை நிலையங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
புதன்கிழமை ஏறத்தாழ 11,000 கட்டடங்களில் மின்விநியோகம் தடைபட்டது. அதற்கு முந்தைய நாள் அந்த எண்ணிக்கை 105,000ஆகப் பதிவானது.
ஆறு இடங்களில் பெரிதாகப் பற்றியெரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தத் தீயணைப்பாளர்கள் போராடிவருகின்றனர். அவற்றில் மூன்று இடங்களில் தீ கட்டுக்கடங்காமல் எரிவதாகத் தெரிவிக்கப்பட்டது.

