ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (மே 20) சிங்கப்பூர் வர இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் திரு அல்பனிஸ் மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணத்தில் சிங்கப்பூர் இடம்பெற்று உள்ளது.
ஒருவார கால வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் மே 14 முதல் மே 16 வரை அவர் இந்தோனீசியாவில் இருப்பார். அதன் பின்னர் மே 18ஆம் தேதி வத்திகன் நகரில் நடைபெற இருக்கும் போப் லியோ பதவி ஏற்பு நிகழ்வில் அவர் கலந்துகொள்வார்.
பயணத்தின் இறுதியில் அவர் சிங்கப்பூர் வந்து செல்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் இருக்கும்போது பிரதமர் லாரன்ஸ் வோங்கை திரு அல்பனிஸ் சந்தித்துப் பேசுவார்.
திரு வோங்கும் மே 3 தேர்தலில் வென்று பிரதமர் பொறுப்பில் நீடிக்கிறார். பிரதமராக அவர் சந்தித்த முதல் தேர்தல் அது.
சிங்கப்பூர் வருகையைக் குறிப்பிட்ட திரு அல்பனிஸ் புதன்கிழமை (மே 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
“பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்திக்க ஆவலுடன் உள்ளேன். ஆஸ்திரேலியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நெருக்கமான பங்காளித்துவம், வட்டார அளவிலான வளப்பம், நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் பின்னணியில் அமைந்தது,” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

