சிட்னி: பசிபிக் பெருங்கடலில் காணாமல்போன ஆஸ்திரேலிய மாலுமியும் அவரது நாயும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர். மழைநீரைக் குடித்தும் பச்சை மீன்களை உண்டும் உயிர்பிழைத்ததாக அந்த மாலுமி தெரிவித்தார்.
அந்த மாலுமியின் பெயர் டிம் ஷாடாக். அவருடைய வயது 51. அவரும் அவரது நாய் பெல்லாவும் கடலோர மெக்சிகோ நகரமான லா பாசிலிருந்து ஏப்ரல் மாதம் கட்டுமரத்தில் புறப்பட்டனர். அவர் கிட்டத்தட்ட 6,000 கி.மீ., தூரம் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
கடலில் திடீரென ஏற்பட்ட சீற்றத்தில் சிக்கி அவருடைய கட்டுமரம் சேதமடைந்தது. அவருடைய மின்னனுச் சாதனங்களும் பழுதானதால் அவரும் அவருடைய நாயும் பசிபிக் பெருங்கடலில் சிக்கித் தவித்தனர்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மெக்சிகன் மீன்பிடிக்கும் கப்பலில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர்.

