ஆஸ்திரேலியக் கடற்பறவைக்கு ‘எச்5என்1’ பறவைக் காய்ச்சல் தொற்று

ஆஸ்திரேலியக் கடற்பறவைக்கு ‘எச்5என்1’ பறவைக் காய்ச்சல் தொற்று

1 mins read
6bbf85db-2b35-4b72-aaa1-b1d049078a4b
தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலோர நகரமான ரோப்பில் கண்டெடுக்கப்பட்ட கடற்பறவைக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்நாட்டுக் கடற்பறவை ஒன்றிற்கு மிக வீரியமிக்க ‘எச்5என்1’ பறவைக் காய்ச்சல் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் இந்த நோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அந்நோய்ப் பரவல் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலோர நகரமான ரோப்பில் கண்டெடுக்கப்பட்ட பெரிய கொண்டை ஆலா( Greater Crested Tern) என அழைக்கப்படும் கடற்பறவைக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு நடத்திய ஆய்வகப் பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டதாக அந்நாட்டின் வேளாண் அமைச்சர் ஜூலி காலின்ஸ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் உள்நாட்டுக் கடற்பறவை ஒன்றிற்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன் கண்டறியப்பட்ட மற்ற அனைத்துப் பறவைக் காய்ச்சல் சம்பவங்களும் இடம்பெயரும் வெளிநாட்டுப் பறவைகளிடமே காணப்பட்டன.

இதற்கிடையே, தெற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் இரு பறவைகளுக்கும் மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு பறவைக்கும் தொற்று இருப்பதாக அதிகாரிகள் ஜூலை 10ஆம் தேதி உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்